ADDED : பிப் 12, 2025 12:21 AM

வரும், 19ம் தேதி, 9-வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. பாக்., மற்றும் துபாயில் நடைபெற உள்ள இத்தொடரில், 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, வங்கதேசம் (பிப்., 20), பாகிஸ்தான் (பிப்., 23), நியூசி., 2 (மார்ச் 2) ஆகிய அணிகளை சந்திக்கிறது. ஆஸி.,க்கு எதிரான தொடரை இழந்தாலும், இங்கிலாந்து எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி, 4 - 1 என தொடரை கைப்பற்றியது.
ரோகித் சர்மா தலைமையிலான நம் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து திருப்பூரை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் நம்முடன் பகிர்ந்தவை...
பலம் காட்டணும்
அகிலன்: துபாய் மைதானம் எப்போதும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது. நாம் ஆட உள்ள மூன்று போட்டியும் துபாயில் நடக்கவுள்ளது. நம்மிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் திருப்திகரமாக இல்லை. பும்ரா காயத்தில் இருந்து மீளாத நிலையில், நான்கு சுழல்பந்து வீச்சாளர்களை நம்பி களம் காண்கிறோம். பேட்டிங்கில் பலம் காட்ட வேண்டியது அவசியம். அடுத்தடுத்த போட்டிக்கான வாய்ப்பு வரை காத்திருக்காமல், துவக்கத்தில் இருந்து வெற்றிகளை பெறுவது நல்லது. விஜய் ஹாசரே போட்டியில் திறமை காட்டிய கருண்நாயரை அணியில் சேர்த்திருக்கலாம்.
அலட்சியம் கூடாது
இளங்கோ: பொதுவாக துபாய், பாகிஸ்தான் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இந்திய பந்துவீச்சாளர்கள் அலட்சியமாக செயல்படாமல், ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீச வேண்டும். அடுத்த சுற்றுக்கு முன்னேற பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கோலி விளையாடணும்
கார்த்திக்: ஓபனிங் பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் இறங்கி அசத்துவார் என எதிர்பார்க்கலாம். கோலி இனியாவது விளையாட வேண்டும். 'லெப்ட் அண்ட் ரைட்' காம்பினேஷனுடன் பேட்ஸ்மேன்கள் களமிறங்க வேண்டும். எதிரணி எதிலும் 'ஆப் ஸ்பின்னர்' கிடையாது; எனவே, எளிதாக ரன்குவிக்க முடியும். பும்ரா இல்லாத நிலையில், நம் ரன் குவிப்பே வெற்றியை உறுதி செய்யும்.
பவர்பிளே முக்கியம்
ராஜா: பாகிஸ்தான் அணியுடன் நம் இந்திய அணி மோதும் போட்டியே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசம் சமீபகாலமாக நன்றாக விளையாடி வருகிறது. ஆஸி., அணி முழு பார்மில் உள்ளது. இரண்டு போட்டி எளிதாக இருந்தாலும், நியூசி., ஆஸி., உடனான போட்டியில் சற்று தடுமாறினாலும், ஆட்டம் கையை விட்டுச் சென்று விடும். முதல் பத்து ஓவர், முதல் 'பவர் பிளே' முக்கியம்; இதுவே ஆட்டத்தை தீர்மானிக்கும்.