/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் 'திடம்' இழந்த திடக்கழிவு மேலாண்மை; விழிப்புணர்வு பாடல் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்துமா?
/
கிராமங்களில் 'திடம்' இழந்த திடக்கழிவு மேலாண்மை; விழிப்புணர்வு பாடல் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்துமா?
கிராமங்களில் 'திடம்' இழந்த திடக்கழிவு மேலாண்மை; விழிப்புணர்வு பாடல் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்துமா?
கிராமங்களில் 'திடம்' இழந்த திடக்கழிவு மேலாண்மை; விழிப்புணர்வு பாடல் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்துமா?
ADDED : பிப் 18, 2025 06:50 AM
திருப்பூர்; ''கிராம ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில், விழிப்புணர்வு பாடலை, அமைச்சர் பெரியசாமி வெளியிட்டார். 'கிராம ஊராட்சிகளில் குப்பைகளை தரம் பிரிக்கவோ, தடையின்றி துாய்மைப்பணி மேற்கொள்ளவோ போதியளவு துாய்மைப் பணியாளர்கள் இல்லை' என்ற ஆதங்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து, வீடு தேடி வரும் துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, விழிப்புணர்வு பாடல் வெளியிட்டுள்ளார்.
'தமிழகத்தில், 1.25 கோடி ஊரக குடியிருப்புகளில் 84,651 பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து தரம் வாரியாக பிரிப்பதற்காக பணியாற்றுகின்றனர். இதற்காக, 8,315 எலக்ட்ரிக் வாகனங்கள், 1,291 டிராக்டர்கள் மற்றும், 372 பிற வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன' என்ற புள்ளிவிபரத்தையும் தெரிவித்துள்ளார்.
ஆனால், மாநிலத்தில் உள்ள, 95 சதவீத கிராம ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் கூட இல்லை. பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் குப்பை கொட்டுவதற்கு இடமே இல்லை. போதியளவு பணியாளர்களோ, கட்டமைப்போ இல்லை. 'குப்பை மலை' நிறைந்த கிராம ஊராட்சிகளே அதிகம்.
கூடுதல் ஊழியர் வேண்டும்
தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சிகள் கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி கூறியதாவது:கிராம ஊராட்சிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றி, திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ள கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். 150 வீடுகளுக்கு ஒரு துாய்மைப் பணியாளர் என்ற விதி அமலில் உள்ளது. ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் மாத சம்பளமாக வழங்கப்படுவதால், பணியாளர்கள் யாரும் வருவதில்லை. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இப்பணிக்கு வருகின்றனர். அவர்களால் உடல் உழைப்பை முற்றிலுமாக செலுத்த முடிவதில்லை. பணியாளர்கள் பற்றாக்குறையால், தினசரி வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்து, தரம் பிரிக்கும் பணியை மேற்கொள்வது சாத்தியமில்லை. துாய்மைப் பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

