/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீமைக்கருவேல மரங்கள் மாயமாகுமா?
/
சீமைக்கருவேல மரங்கள் மாயமாகுமா?
ADDED : ஆக 31, 2025 12:50 AM

கிராமம் மற்றும் நகரை ஒட்டிய கிராமப்புறங்களில் பெரும் பரப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து, நிலத்தடி நீரை உறிஞ்சி, வறட்சிக்கு வழி காட்டிக் கொண்டிருக்கின்றன, சீமைக்கருவேல மரங்கள். இம்மரங்கள் அருகில் பிற தாவரங்களின் வளர்ச்சி கூட தடைபட்டு போகும். மழை இல்லாத போது, காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்வதால், காற்றின் ஈரப்பத அளவு குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது.
'மாதந்தோறும் சில கிராமங்களை, சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்க வேண்டும். அவற்றை வேருடன் அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். முழுமையா மரங்கள் அகற்றப்படுவதுடன், மீண்டும் முளைக்காதிருக்க செய்ய வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட நிலைமை குறித்து, பசுமை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர்களின் கருத்துகள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
---
முழுமையாக அகற்ற முடியும்
உள்ளாட்சி நிர்வாகத்திடம் நிதியும், வருவாய்த்துறையிடம் சீமைக்கருவேல மரங்கள் எந்ததெந்த இடத்தில் நிறைந்துள்ளன என்ற விவரமும் இருக்கும் என்பதால், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து செயலாற்றினால் தான் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற முடியும். கலெக்டர் நேரடி கண்காணிப்பில், நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். நீர் வழிப்பாதையை சுத்தம் செய்தால், அடைபட்டுள்ள, தடைபட்டுள்ள நீர்வழிப்பாதையையும் அறிந்து கொள்ள முடியும்; அவற்றை மீட்டெடுக்க முடியும். கோவை சுற்றுவட்டார கிராமங்களில், பல இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகிறோம்.- - செல்வராஜ், நிறுவனர்கவுசிகா நீர்க்கரங்கள்--
பிற மரக்கன்றுகள் வளர்க்கலாம்
சீமைக்கருவேல மரங்களின் விதைகள் வேகமாக பரவி, சுற்றியுள்ள இடங்களிலும் முளைத்துக் கொண்டே செல்கிறது. சீமைக்கருவேல மரம் எரிபொருளாக மட்டுமே பயன்படுகிறது; மற்றபடி, வேறெந்த பலனுமில்லை. மரங்கள் அகற்றப்பட்ட இடத்தில், பிற தாவர இனங்கள் தடையின்றி வளர்கின்றன. எங்கள் அமைப்பின் சார்பில், நன்கொடையாளர் உதவியுடன், தொரவலுார், சொக்கனுார் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகிறோம். மாநிலம் முழுக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர் கண்காணிப்பில் அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக அவற்றை வேரோடு அகற்றி, அந்த இடத்தில் பனை விதை உள்ளிட்ட பிற மரக்கன்று வளர்க்க, அரசு உத்தரவிட வேண்டும்.-- சம்பத்குமார், ஒருங்கிணைப்பாளர்கிராமிய மக்கள் இயக்கம்
---
ஆட்சேபனை தெரிவிக்கும் அதிகாரிகள்
ஊராட்சி பகுதிகளில், காலியாக கிடக்கும் வீட்டுமனையிடங்களில் சீமைக்கருவேல மரங்கள் நிரம்பிக்கிடக்கின்றன. கிராம ஊராட்சிகள் சார்பில், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை, 'பொக்லைன்' வாயிலாக மேற்கொண்டு, அதற்கான தொகை வழங்கிய பிறகு, அந்த தொகைக்கு ஒப்புதல் வழங்க, ஊராட்சி ஒன்றிய தணிக்கை அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். இதனால், நிதி ஆதாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஊராட்சி நிர்வாகங்களால் இப்பணியை மேற்கொள்ள முடியாமல் போகிறது. அனுமதியில்லாத, பயன்பாட்டுக்கு வராத தனியார் 'சைட்'களில் தான் பல ஏக்கர் பரப்பளவில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன. சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற, ஊராட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.- அசோக்குமார், முன்னாள் தலைவர்மாதப்பூர் ஊராட்சி-----
குளத்தில் நிரம்பியது அத்திக்கடவு நீர்
அவிநாசி ஒன்றியத்தில் பெரிய ஏரியாக உள்ள கானுார் ஏரியை பாதுகாக்கும் நோக்கில், உள்ளூர் மக்களுடன் இணைந்து, 'கானுார் ஏரி பாதுகாப்பு சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். குளக்கரை மற்றும் குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முதலில், அரிவாள் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தினோம். இது கடினமானதாக இருந்ததால், தன்னார்வ அமைப்பினரின் நன்கொடையுடன், 'பொக்லைன்' உதவியுடன் அவற்றை வேரோடு பிடுங்கி அகற்றினோம். இதனால், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறைந்து, மழைநீர் மற்றும் அத்திக்கடவு திட்ட நீர் நிரம்பி நிற்கிறது. இருப்பினும், ஆங்காங்கே வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றவும், ஏரியை துார்வாரவும், அரசு உதவ வேண்டும்.- கார்த்திகேயன், செயலாளர், கானுார் ஏரி பாதுகாப்பு சங்கம்
--
அகற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு அவசியம்
அவிநாசி முறியாண்டம்பாளையம் - கருவலுார் இடைபட்டு, பெரிய குரும்பபாளையம் குளம் உள்ளது; இதில் நிரம்பும் நீர்தான், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் நீர்மட்டம் உயரவும், அதனால் விவசாயம் செழிக்கவும் காரணமாக உள்ளது. இக்குளம் மற்றும் குளக்கரையிலும், அதையொட்டிய தனியார் இடத்திலும் வளர்ந்திருந்த சீமைக்கருவேல் மரங்களை, மூன்றாண்டுக்கு முன் அகற்றினோம். தன்னார்வலர்களின் நன்கொடையால், 'பொக்லைன்' உதவியுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் பழையபடி, அவை வளர்ந்துள்ளன. அவற்றை வேரோடு அகற்றி, பிற மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.- ரவிக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர்முறியாண்டம்பாளையம்.
அவிநாசி முறியாண்டம்பாளையம் - கருவலுார் இடைபட்டு, பெரிய குரும்பபாளையம் குளம் உள்ளது; இதில் நிரம்பும் நீர்தான், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் நீர்மட்டம் உயரவும், அதனால் விவசாயம் செழிக்கவும் காரணமாக உள்ளது. இக்குளம் மற்றும் குளக்கரையிலும், அதையொட்டிய தனியார் இடத்திலும் வளர்ந்திருந்த சீமைக்கருவேல் மரங்களை, மூன்றாண்டுக்கு முன் அகற்றினோம். தன்னார்வலர்களின் நன்கொடை யால், 'பொக்லைன்' உதவியுடன் இப்பணி மேற் கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் பழையபடி, அவை வளர்ந்துள்ளன. அவற்றை வேரோடு அகற்றி, பிற மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.
- ரவிக்குமார்,
முன்னாள் ஊராட்சிதலைவர், முறியாண்டம்பாளையம்.
புறக்கணிக்கப்பட வேண்டிய
'ரவுடி' மரம் அல்ல
சீமைக்கருவேல மரங்கள் என்பது, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட வேண்டிய 'ரவுடி' மரம் அல்ல. கடந்த, 1970ல் துவங்கி, 1980 வரை மக்களின் விறகு தேவைக்காக, அரசின் சார்பில் சிறிய ெஹலிகாப்டர் வாயிலாக, வான் வழியாக வனப்பகுதியில் துாவப்பட்டது தான், சீமைக்கருவேல விதை. சரியான பருவத்தில் உழவு செய்து, விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலத்தில், சீமைக்கருவேல மரங்கள் முளைக்காது: மாறாக, தரிசாக உள்ள நிலத்தில் தான், அழையா விருந்தாளியாக பரவி, வளரத்துவங்கிவிடும்.
சீமைக்கருவேல மரங்கள், விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் இருக்கக்கூடாது; அதையொட்டி பிற தாவரங்கள் வளராது என்பது தான் அதற்கு காரணம். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது நல்லது; அதே நேரம், அந்த இடத்தில் மண்ணுக்கேற்ற, மரபு சார்ந்த இலுப்பை, வேப்பம், புங்கை, புளியமரம் உள்ளிட்ட மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
கடந்த, 2004 - 2005ல், ஆண்டிப்பாளையம் குளத்தில் சீமைக்கருவேல மரங்களைஅகற்றும் பணியை மேற்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு பொதுப்பணித்துறை பொறியாளர், குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டிய அவசியமே இல்லை. குளத்துக்கு நீரை மட்டும் நிரம்ப செய்யுங்கள்; 90 நாளில் அதுவே அழுகி, மீனுக்கு இரையாகிவிடும் என்றார்; அதன்படியே செய்தோம்.
- சிவராம்,
தலைவர்,
வெற்றி அறக்கட்டளை, திருப்பூர்.

