/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமையுமா? கிடப்பில் போடப்பட்ட கருத்துரு
/
பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமையுமா? கிடப்பில் போடப்பட்ட கருத்துரு
பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமையுமா? கிடப்பில் போடப்பட்ட கருத்துரு
பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமையுமா? கிடப்பில் போடப்பட்ட கருத்துரு
ADDED : செப் 26, 2024 11:23 PM
உடுமலை : பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கருத்துரு சமர்ப்பித்து, பல ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொள்ளாச்சி - தாராபுரம் ரோட்டில், தற்போது ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால், இந்த ரோடு எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.
மேலும், பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு பெதப்பம்பட்டியில் உள்ளது. குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள், நுாற்பாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிகக்கடைகள், இப்பகுதியில் அமைந்துள்ளன.
பொள்ளாச்சியில் இருந்து பெதப்பம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்கள், நால்ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. அப்போது, தாராபுரம் உட்பட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் விலகிச்செல்ல இடமிருப்பதில்லை. சில சமயங்களில் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதே நிலை, உடுமலை, செஞ்சேரிமலை, குடிமங்கலம் உட்பட வழித்தட பஸ்கள் நிற்கும் போதும் ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நால்ரோட்டில் நெரிசலை குறைக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அப்போது, அங்கிருந்த நிழற்கூரையும் அப்புறப்படுத்தப்பட்டு, இடவசதி ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட கல்வி நிறுவனங்கள் இருப்பதால், நால்ரோட்டில் எப்போதும் மாணவர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
எனவே, பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியக்குழு சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, கருத்துரு அனுப்ப, ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
அதிகாரிகள் தரப்பிலும், அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நால்ரோட்டில் நெரிசலும், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.
குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில், முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பெதப்பம்பட்டி உள்ளது. அங்கு நாள்தோறும் நிகழும் நெரிசல் மற்றும் இதர பிரச்னைகள் குறித்து குடிமங்கலம் போலீசார் கண்டுகொள்வதில்லை. நெரிசலை கட்டுப்படுத்த, போலீசாரும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.