/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெயிலில் ரயிலுக்கு காத்திருப்பு நிழற்கூரை அமைக்கப்படுமா?
/
வெயிலில் ரயிலுக்கு காத்திருப்பு நிழற்கூரை அமைக்கப்படுமா?
வெயிலில் ரயிலுக்கு காத்திருப்பு நிழற்கூரை அமைக்கப்படுமா?
வெயிலில் ரயிலுக்கு காத்திருப்பு நிழற்கூரை அமைக்கப்படுமா?
ADDED : ஆக 29, 2025 09:29 PM
உடுமலை, ; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், போதியளவு நிழற்கூரை இல்லாததால், ரயிலுக்காக காத்திருக்கும் பயணியர் சிரமப்படுகின்றனர்.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற பிறகு, உடுமலை ரயில்வே ஸ்டேஷனை அதிகளவு பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த அகல ரயில்பாதையில், கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு- - திருச்செந்துார், மதுரை - திருவனந்தபுரம் ரயில்களும், சிறப்பு ரயில்களும் சீசனில் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் சேவையை பயன்படுத்த, உடுமலை பகுதி பயணியர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக, வார இறுதி நாட்களில், சென்னை செல்லும் ரயிலிலும், திருச்செந்துார் ரயிலிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அப்போது, ரயிலில் அமர இடம் கிடைக்காமல் நின்று கொண்டும், நெருக்கடியில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அகல ரயில்பாதையாக மாற்றி பல ஆண்டுகளானாலும், இன்னும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், போதிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
குறிப்பாக, போதியளவு நிழற்கூரை இல்லாததால், பயணியர் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போதுள்ள நிழற்கூரையை குறைந்தளவு பயணிகளே பயன்படுத்த முடியும்.
அப்பகுதியில் நிற்கும் போது, ரயில் வந்த பிறகு, ஓடிச்சென்று, தங்களுக்காக ஒதுக்கீட்டு பெட்டியில் மக்கள் ஏற வேண்டியுள்ளது. அதிலும் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
எனவே, தற்போதுள்ள நிழற்கூரையை குறிப்பிட்ட துாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என பயணிகள் மதுரை ரயில்வே கோட்டத்துக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.