ADDED : டிச 15, 2025 05:23 AM
திருப்பூர்: அண்மையில் ராஜ்ய சபாவில் தி.மு.க., -எம்.பி., கிரிராஜன் திடக்கழிவு மேலாண்மை குறித்துமசோதா தாக்கல் செய்தார்.
இது அரசாணையாக பிறப்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டால் உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் திடக்கழிவு மேலாண்மைக்கு பெரும் உதவியாக இருக்கும். திருப்பூருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''மத்திய அரசு துாய்மை இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இது போன்ற பல திட்டங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மட்டுமே ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மாநில அரசுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு பயனுள்ள திட்டமாக நிதி ஆதாரம் வழங்கினால் பெரும் உதவியாக அமையும்.
உதாரணமாக திருப்பூர் மாநகராட்சியில் தினமும் சேகரமாகும் 800 டன் கழிவுகள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, முழுமையான தீர்வை நோக்கிப் பயணிப்பதாக இல்லாமல் உள்ளது.கழிவுகள் அகற்றுதல், மறுசுழற்சி பயன்பாடு போன்ற கட்டமைப்புகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி வழங்கினால், உள்ளாட்சி அமைப்புகள் சற்று நிம்மதியடையும்.
இந்த மசோதா விரைவில் அரசாணையாக பிறப்பித்து சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.
