/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அழிவிலிருந்து தென்னை சாகுபடியை மீட்க ஏதாவது செய்வார்களா? கண்துடைப்பு திட்டங்களால் பலன் ஏதுமில்லை
/
அழிவிலிருந்து தென்னை சாகுபடியை மீட்க ஏதாவது செய்வார்களா? கண்துடைப்பு திட்டங்களால் பலன் ஏதுமில்லை
அழிவிலிருந்து தென்னை சாகுபடியை மீட்க ஏதாவது செய்வார்களா? கண்துடைப்பு திட்டங்களால் பலன் ஏதுமில்லை
அழிவிலிருந்து தென்னை சாகுபடியை மீட்க ஏதாவது செய்வார்களா? கண்துடைப்பு திட்டங்களால் பலன் ஏதுமில்லை
ADDED : செப் 16, 2025 10:03 PM
உடுமலை; பிரதான சாகுபடியான தென்னையில் தொடர் நோய்த்தாக்குதலால், மரங்களை வெட்டி அகற்றி வருகிறோம்; தென்னை சீரமைப்பு நிதி ஒதுக்கீடு மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் என எவ்வித உதவியும் தமிழக அரசு வழங்காதது வேதனையளிக்கிறது,' என இரு வட்டார விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை வட்டாரத்தில், 18,650; குடிமங்கலம் வட்டாரத்தில், 14,850 ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு, பல லட்சம் மரங்கள் நீண்ட கால பயிராக விவசாயிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, தென்னை சாகுபடி பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. முன்பு தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சிக்காக போராடிய விவசாயிகள், தற்போது தென்னை மரங்களை காப்பாற்றவே திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கேரள வாடல் நோய், பல ஆயிரம் மரங்களை வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளியுள்ளது.
ஒவ்வொரு தென்னந்தோப்பிலும், சராசரியாக, 10 முதல் 40 ஆண்டுகள் வரை பராமரித்த தென்னை மரங்களை, நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியாமல் அவற்றை அடியோடு வெட்டி வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, வாடல் நோயின் தாக்கம் அனைத்து பகுதிகளிலும் அதிகளவு தெரிய துவங்கியுள்ளது. இந்நோய் தாக்குதலில் இருந்து மரங்களை மீட்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினாலும் எவ்வித பலனும் இல்லை.
கண்டுகொள்ளாத அரசு சில ஆண்டுகளுக்கு முன், வறட்சியால் தென்னை மரங்கள் பாதித்த போது, அரசால் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது பிரதான சாகுபடியே கேள்விக்குறியாக மாறியும் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
முன்பு, மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக, தென்னை சீரமைப்பு நிதி மற்றும் இதர திட்டங்கள் விவசாயிகளை உள்ளடக்கிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு நேரடியாக செயல்படுத்தப்பட்டது. இதனால், அதிகளவு விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.
பின்னர், இந்த நிதி தமிழக அரசு வேளாண், தோட்டக்கலைத்துறை வாயிலாக விவசாயிகளுக்கு வினியோகிக்கும் வகையில், திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு, நிதி ஒதுக்கீடும் குறைந்து, அதிக சாகுபடி பரப்பு உள்ள பகுதிகளுக்கும் குறைந்தளவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உதாரணமாக, உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பல லட்சம் தென்னை விவசாயிகள் உள்ள நிலையில், தமிழக அரசு தென்னங்கன்று, மானிய இடுபொருட்களை, ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்கிறது.
பெயரளவுக்கு செயல்படுத்தப்படும் மானிய திட்டங்களால், தொடர் பிரச்னைகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளாக, தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்தது மக்களையும் பாதித்த வருகிறது; தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் பல மடங்கு உயர்ந்து விட்டது.
கொப்பரை களங்களில் உற்பத்தி குறைந்து தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்; தென்னை நார் உற்பத்திக்கும் மூலப்பொருளான மட்டை கிடைப்பதில்லை.
திருப்பூர் மாவட்டத்தில், பிரதான சாகுபடியாக உள்ள தென்னையை பாதுகாக்க, தமிழக அரசு அலட்சியத்தை கைவிட்டு, சீரமைப்பு நிதியை சாகுபடி பரப்புக்கு ஏற்ப, ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நோய்த்தடுப்பு மருந்துகளை மானியத்தில் வழங்குவதுடன், முழு வீச்சில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், பல லட்சம் தென்னை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களும் முடங்கும் நிலை ஏற்படும்.
கண்துடைப்புக்காக மானிய திட்டங்களை செயல்படுத்தாமல், தென்னை சாகுபடியை பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு மனு அனுப்பி வருகின்றனர்.