/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரக்கன்று நடும் பணி கிராமங்களில் பாதிப்பு?
/
மரக்கன்று நடும் பணி கிராமங்களில் பாதிப்பு?
ADDED : ஏப் 12, 2025 11:13 PM
திருப்பூர்: பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், கிராமங்களில் மரக்கன்று நடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த, 3 ஆண்டுகள் முன், 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' மூலம், 10 ஆண்டுகளில், 265 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கடந்த, 3 ஆண்டுகளில், 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன.
தற்போது 36 மாவட்டங்களில் 33.23 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நுாறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அளவிலும் ஒரு ஊராட்சியில் நாற்று நர்சரி அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஊராட்சிகளில் தற்போது நுாறு நாள் திட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மரக்கன்று நடும் பணியிலும் தொய்வு ஏற்படும் என, ஊராட்சி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் கூறுகையில், ''நகர்ப்புறங்களை ஒட்டிய கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள், மாற்று வேலைக்கு செல்ல துவங்கிவிட்டனர். ஒதுக்குப்புறமாக உள்ள கிராமங்களில் பணிபுரியும் நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு, இத்திட்டம் வரப்பிரசாதமாக இருந்தது; தற்போது, சம்பளம் இல்லாததாலும், ஆட்குறைப்பு நடவடிக்கையாலும் அவர்களும் நம்பிக்கை இழந்துவிட்டனர். அரசின் பசுமை காக்கும் பணியும் பாதிக்கப்படும்'' என்றார்.

