/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயன்படுத்த முடியாத நகர பூங்காக்கள்... சீரமைக்கப்படுமா?: ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால் அதிருப்தி
/
பயன்படுத்த முடியாத நகர பூங்காக்கள்... சீரமைக்கப்படுமா?: ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால் அதிருப்தி
பயன்படுத்த முடியாத நகர பூங்காக்கள்... சீரமைக்கப்படுமா?: ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால் அதிருப்தி
பயன்படுத்த முடியாத நகர பூங்காக்கள்... சீரமைக்கப்படுமா?: ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால் அதிருப்தி
ADDED : மார் 02, 2026 04:57 AM

உடுமலை: நகர குடியிருப்புகளில் பராமரிப்பில்லாமல், புதர் மண்டி காணப்படும் பூங்காக்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பள்ளி கோடை விடுமுறை காலத்திலாவது பூங்காவை பயன்படுத்தும் வகையில், உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட, 33 வார்டுகளில், 120க்கும் மேற்பட்ட பூங்கா ஒதுக்கீட்டு இடங்கள் இருந்தது.
நகராட்சி நிர்வாகத்திடம், முறையாக பொது இடங்களை ஒப்படைக்காதது, ஒப்படைத்த நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால், பல வார்டுகளில், பொது ஒதுக்கீட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது.
இந்த நிலங்களை மீட்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, 55 பூங்கா இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை பாதுகாக்கும் பணிகளும் நடந்தது.
சம்பந்தப்பட்ட இடத்தில், பூங்கா இடம் குறித்த அனைத்து விபரங்களும் எழுதப்பட்டு, கம்பி வேலியும் அமைத்தனர்.
பின்னர் சிறப்புத்திட்டங்களின் கீழ் பூங்கா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டு, நடைபயிற்சிக்கான தளம் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட பூங்காக்களை மக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்தினர். பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நகரில், குடியிருப்புகளில் அமைக்கப்பட்ட பூங்காவை மக்களே பராமரித்தும் வந்தனர்.
இந்நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாதது, பழுதடைந்த விளையாட்டு சாதனங்களை மாற்றியமைக்காததுடன், குறிப்பிட்ட இடைவெளியில் துாய்மை பணிகளை மேற்கொள்ளாமல் விட்டதால், பூங்காக்கள் பொலிவிழந்து, புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டன.
இவ்வாறு, பயன்பாட்டில் இருந்த, 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள், தற்போது அவல நிலையில் காணப்படுகின்றன.
நகராட்சி நுாற்றாண்டு சிறப்பு திட்டத்தின் கீழ், ஒதுக்கப்பட்ட நிதியில், பூங்கா மேம்பாட்டு பணிகளும் நீண்ட காலமாக இழுபறியாக நடக்கிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மீண்டும் பூங்கா இடங்கள் ஆக்கிரமிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில், கோடை விடுமுறை காலம் துவங்க உள்ள நிலையில் குழந்தைகள் விளையாடவும், மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பூங்காக்களை சீரமைக்க வேண்டும்.
இழுபறியாக நடக்கும் மேம்பாட்டுப்பணிகள் குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி அதிகளவு உள்ளது. எனவே, அத்துறையின் கீழ், உடுமலையில் தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்கா அமைக்கப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்காக இடம் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகளும் நடந்தது. இத்திட்டமும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

