தென்னையிலிருந்து 'நீரா' பானம் உற்பத்தி மீண்டும் வருமா?:தவிக்கும் விவசாயிகளுக்கு ஆறுதல் தேவை
தென்னையிலிருந்து 'நீரா' பானம் உற்பத்தி மீண்டும் வருமா?:தவிக்கும் விவசாயிகளுக்கு ஆறுதல் தேவை
UPDATED : ஆக 24, 2026 05:47 PM
ADDED : ஆக 24, 2026 04:41 PM

உடுமலை: நிலையில்லாத விலை, தொடர் நோய்த்தாக்குதலால் தென்னை விவசாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், முடங்கியுள்ள 'நீரா' பானம் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில், அதிக தென்னை பயிரிடப்படும் மாநிலங்களில், உற்பத்தியின் அடிப்படையில், தமிழகம் இரண்டாவது இடத்திலும், பரப்பளவில், மூன்றாவது இடத்திலும், உற்பத்தி திறனிலும், முதலிடத்திலும் உள்ளது.
இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த தென்னை சாகுபடி, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நிரந்தரமில்லாத தேங்காய், கொப்பரை விலை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
அதே போல் பருவநிலை மாற்றங்களால், வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் என பல வகையான நோய்த்தாக்குதல் பரவி வருகிறது.
காய்ப்புத்திறன் குறைவு, நிலையில்லாத விலை உள்ளிட்ட பிரச்னைகளால் தவிக்கும் தென்னை சாகுபடியை மீட்க, அரசு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நடவடிக்கை தேவை தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, 'நீரா' உற்பத்திக்கு, தமிழக அரசு, 2018ல், அனுமதியளித்து, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக இப்பானம் உற்பத்தி துவங்கியது.
தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையில் இருந்து பெறப்படும் 'நீரா' பானம், பல்வேறு சத்துகளை உள்ளடக்கியது. மரத்தில் இருந்து, 5 டிகிரி செல்சியஸ், குளுமையில் இந்த பானம் வடித்து எடுக்கப்படும்.
தொடர்ந்து, இப்பானத்தை, அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், எலும்புக்கும் வலு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளும், பானத்தை அருந்தலாம் என அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், 'நீரா' பானத்திலிருந்து தென்னஞ்சக்கரை, சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க முடியும். ஆனால், சில நடைமுறை சிக்கல்களால், நீரா பானத்தை நேரடியாக சந்தைப்படுத்த முடியவில்லை.
இந்த பானத்தில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. இவ்வாறு, படிப்படியாக குறைந்த 'நீரா' உற்பத்தி தற்போது முற்றிலுமாக முடங்கி விட்டது.
விழிப்புணர்வு ஏற்படுத்தணும் தென்னை விவசாயிகள் கூறியதாவது: பல்வேறு சத்துகளை உள்ளடக்கிய நீரா பானம் அருந்துவது குறித்து, அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதனால், மக்களும், உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள்.
இப்பானம் உற்பத்தி மற்றும் விற்பனையிலுள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க, விவசாயிகளிடம், கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தலாம்.
இதில், பெறப்படும் விபரங்கள் அடிப்படையில், நிபுணர் குழு வாயிலாக பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதுடன், தென்னை வளர்ச்சி வாரிய உதவியுடன், மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்புக்கும் பயிற்சி வழங்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளை, தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டால் மட்டுமே, தென்னை விவசாயம் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே, பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியை அழிவிலிருந்து மீட்க முடியும். நீரா பானம் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பால், கொப்பரை, தேங்காய்க்கு நிலையான விலை கிடைக்கும்.
பொருளாதார இழப்பை தவிர்க்கும் போது, நோய்க்கட்டுப்பாடு முறைகளுக்கு விவசாயிகள் முறையாக செலவிட முடியும்.
