'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் மாநிலம் முழுதும் கட்டாயமாகுமா?
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் மாநிலம் முழுதும் கட்டாயமாகுமா?
ADDED : ஜூலை 07, 2026 06:56 AM

திருப்பூர்: திருப்பூரில் பொதுச் சுத்திகரிப்பு நிலையங்களில் பின்பற்றப்படும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை, சாய ஆலைகள் இயங்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயமாக்க வேண்டும் என திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், திருப்பூரில் 2009ம் ஆண்டு முதல் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது.
தினமும், 13 கோடி லிட்டர் சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதுடன், அதில், 10 கோடி லிட்டர் தண்ணீர் மறுசுழற்சிக்காக மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க 250 முதல் 400 ரூபாய் வரை செலவாகிறது.
ஆனால், பிற மாவட்டங்களில் இந்தத் தொழில்நுட்பம் கட்டாயமாக இல்லாததால், சாயமிடும் செலவு குறைவாக உள்ளது. இதனால், சில பின்னலாடை உற்பத்தியாளர்கள் அங்கு சாயமிடச் செல்வதாகவும், திருப்பூரை விட, 30 சதவீதம் குறைவாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் தலைவர் காந்திராஜன் கூறுகையில், ''இந்தியாவிலேயே திருப்பூரில் மட்டுமே 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையில் சாயக்கழிவு சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத உற்பத்திதான் தற்போது ஏற்றுமதி சந்தையின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.
எனவே, மாநிலம் முழுவதும் சாய ஆலைகள் இயங்கும் அனைத்து பகுதிகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க வேண்டும் என அமைச்சரிடமும், எம்.எல்.ஏ.க்களிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.
திருப்பூரில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை மேம்படுத்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கியது. தற்போது தொழில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால், அந்தக் கடனை மானியமாக மாற்றி தொழிலுக்கு உதவ வேண்டும் என்றும் தொழில்துறையினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
