/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜன்னல்கள் 'ஜாம்'; 'ஜம்' இல்லை பயணம்! அரசு பஸ்களில் அவலம்
/
ஜன்னல்கள் 'ஜாம்'; 'ஜம்' இல்லை பயணம்! அரசு பஸ்களில் அவலம்
ஜன்னல்கள் 'ஜாம்'; 'ஜம்' இல்லை பயணம்! அரசு பஸ்களில் அவலம்
ஜன்னல்கள் 'ஜாம்'; 'ஜம்' இல்லை பயணம்! அரசு பஸ்களில் அவலம்
UPDATED : பிப் 10, 2024 01:57 AM
ADDED : பிப் 10, 2024 12:23 AM

திருப்பூர்:திருப்பூரில் இயங்கும் அரசு டவுன் பஸ்கள் மோசமான நிலையில் உள்ளன. பராமரிப்பு இல்லாததால், பயணிகள் படும் துயரத்துக்கு அளவில்லை.
கடந்த வாரம், சென்னை, வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு வரை செல்லும் டவுன் பஸ்சில் (தடம் எண்:56) பயணித்த பெண், திடீரென பஸ்சில் பலகை உடைந்து, தவறி விழுந்தார்; காலில் காயம் ஏற்பட்டது. திருப்பூரில் டவுன் பஸ்களை இயக்கத்துக்கு அனுப்பும் முன் முழுமையாக பரிசோதனை செய்தே அனுப்ப வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
திருப்பூரில் டிப்போ - 1 மற்றும் 2 உட்பட மாவட்டத்திலுள்ள எட்டு கிளைகளில் இருந்து, 535 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சர்வீஸ் பஸ்களை பொறுத்த வரை ஓரளவு பராமரிப்பில் உள்ளது. குறிப்பாக, இவற்றில், 60 சதவீத பஸ்கள் நீலம், மஞ்சள் நிறத்தில் முறையே, பி.எஸ்., 4, பி.எஸ்., 6 வாகனங்களாக மாற்றி இயக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் இயங்கும் டவுன் பஸ்களின் நிலை தான் மிகவும் பரிதாபம். திறக்கவோ அல்லது மூடவோ முடியாத ஜன்னல்களால், அதிகாலை, இரவில் பயணிப்போர் சிரமப்படுகின்றனர்.
வெயில் நேரங்களில் வியர்த்து கொட்டுகிறது; ஜன்னலை திறக்கலாம் என்றால் அதற்கு வழியில்லை. குளிர்காலத்தில் ஜன்னலை மூடலாம் என்றால், அசைக்க முடிவதில்லை.
சில பஸ்களில் இருக்கை சேதமாகி, இருக்கை 'ஸ்பாஞ்ச்' இல்லாமல் மேடு போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. நீண்ட நேரம் பயணிகள் அமர்ந்து பயணிக்க முடிவதில்லை. சில பஸ்களில் தரைத்தளம் இரும்பு துருப்பிடித்து சாலை தெரியும் வகையில் இப்போதே சிறிய ஓட்டைகள் உள்ளன. கதவு திறந்து விடாமல் இருக்க, கம்பி எதிரே வருவோரை கிழிக்காமல் இருக்க கயிறு போட்டு கட்டியும் வைத்துள்ளனர்.
எந்த ரூட்டில் பஸ் செல்கிறது என்ற விபரத்தை எழுதி வைக்கும் பலகை, பஸ்சில் குறிப்பிட்டுள்ள பஸ் எண், ஊர் பெயர் கூட வெயில், மழைக்கு வெளுத்து போயுள்ளது. பயணிகள் பார்வைக்கு தெரியாத நிலை உள்ளது.
'எப்படியோ ஓடுனா சரிதான்'
அரசு பஸ் டிரைவர்கள் கூறுகையில், ''புகார் புத்தகம் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. புகார் எழுதும் போது, அதன் தன்மையை பார்த்து, அதற்கேற்ப சரிசெய்கின்றனர். சுத்தமாகவே பயன்படுத்த முடியாத, கடைசி நிலை வரும்வரை விட்டு விடுகின்றனர். அலுவலர் களை பொறுத்த வரை பஸ் இன்ஜின் தவிர வேறு சத்தம் வராமல், எங்கும் நிற்காமல் பிரச்னை இல்லாமல் ஓடினால் சரி. மற்ற வகையில் சிறிய பழுது, உடைசல்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை'' என்றனர்.
நல்லா சொல்றாங்க 'அட்வைஸ்'
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விசாரித்தால், ''பஸ்களின் தினசரி நிலை குறித்து எழுத, பதிவேடு உள்ளது. பதிவேட்டில் எழுதப்படும் குறைகளை இரண்டு நாட்களுக்கு சரிசெய்ய ஊழியர்கள் போதிய அளவில் உள்ளனர். டிரைவர், நடத்துனர் தங்கள் டிரிப் முடிக்கும் போது, பழுது குறித்து குறிப்பிட வேண்டும். பஸ்களை எடுத்துச் செல்லும் போது, குறைபாடு சரிசெய்யப்பட்டதா என்பதை கவனிக்க வேண்டும்,' என்று வழக்கம்போல் பதில் அளித்தனர்.