/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரு துறைகளுக்குள் 'நீயா... நானா?': மாறிமாறி புகார் சொல்லும் அதிகாரிகள்; சாக்கடை கால்வாய் கட்டுமானம் தாமதம்
/
இரு துறைகளுக்குள் 'நீயா... நானா?': மாறிமாறி புகார் சொல்லும் அதிகாரிகள்; சாக்கடை கால்வாய் கட்டுமானம் தாமதம்
இரு துறைகளுக்குள் 'நீயா... நானா?': மாறிமாறி புகார் சொல்லும் அதிகாரிகள்; சாக்கடை கால்வாய் கட்டுமானம் தாமதம்
இரு துறைகளுக்குள் 'நீயா... நானா?': மாறிமாறி புகார் சொல்லும் அதிகாரிகள்; சாக்கடை கால்வாய் கட்டுமானம் தாமதம்
ADDED : செப் 19, 2024 06:30 AM

அவிநாசி : சாக்கடை கால்வாய் கட்டுமான பணிக்கு இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றுவதால், மின்வாரியம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடையே நிலவும் 'ஈகோ' பிரச்னையால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அவிநாசியில், கடந்தாண்டு சித்திரை தேர்த்திருவிழாவில், கோவை மெயின் ரோட்டில் இருந்து மேற்கு ரத வீதிக்கு பெரிய தேர் திரும்பி வரும் போது, ஆக்கிரமிப்பால் ரோட்டில் நடப்பட்டிருந்த மின் கம்பத்தில் தேர் முட்டி நின்றது.
அதன்பின், நான்கு ரத வீதியிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிப்புறமாக உள்ள டிரான்ஸ்பார்மர்களை மாற்றி அமைத்து புதைவட மின் மாற்றிகளாக பதிக்க நடவடிக்கை எடுத்தனர். அதற்கான பணிகள் ரத வீதியிலும் நடந்து வருகிறது.
இந்நிலையில், வடக்கு ரத வீதியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், பாரதி வீதியில் இருந்து, சேவூர் ரோட்டில் மாணிக்கவாசகர் திருமடம் வரை சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நெடுஞ்சாலைத் துறையின் அளவீடுகள் உள்ள பகுதியில் சாக்கடை கால்வாய் வடிகால் பணியை செய்யாமல் ஏற்கனவே இருந்த சாக்கடை கால்வாயினை இடித்துவிட்டு கட்டி வருகின்றனர்.
சாக்கடை கால்வாய் வடிகால் பணிகள் நடைபெற்ற பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதன் அருகிலேயே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்கும் போது சாக்கடை கால்வாய் வடிகால் பணியும் சாலை விரிவாக்கத்திற்காக சற்று தள்ளி அமைக்கப்படும்.
ஆனால், நெடுஞ்சாலைத்துறையினர் இதற்கான முயற்சி எடுக்காததால், சாக்கடை கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
முட்டுக்கட்டை
-------------
இது குறித்து, அகில பாரத அனுமன் சேனா மாநில் செயலாளர் தியாகராஜன் கூறியதாவது:
தற்போது வடக்கு ரத வீதியில், வடபுறத்தில் சாக்கடை கால்வாய் கட்டப்படுகிறது. அதில், மாணிக்கவாசகர் திருமடம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் அமைத்து, கால்வாய் கட்டினால், பிரச்னை இருக்காது. மின்வாரியம் தரப்பில், டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்ற தயாராக உள்ளனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறையினரோ இடம் தர மறுக்கின்றனர்.
ஒரு டிரான்ஸ்பார்மர் இடம் மாற்றம் செய்ய மின்வாரியத்துக்கு, 20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், மின்வாரியமே தானாக முன்வந்து டிரான்ஸ்பார்மரை இடம் மாற்ற முயற்சிக்கும் போது, அதற்கு நெடுஞ்சாலை துறையினர் முட்டுக்கட்டை போடுகின்றனர். இது விஷயத்தில், கலெக்டர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
----------------------------------
விரைவில் நடக்கும்...
டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைப்பதற்கான இடம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை,ஆய்வு செய்து அளந்து கொடுத்த பின் பணிகள் நடைபெறும். எதிர்காலத்தில் சாலையை அகலப்படுத்தும் போது அதற்கு வசதியாக தற்போது ரோட்டின் ஓரமாக பதிக்கப்பட்டு வரும் புதை வட கம்பிகளை கூட சற்று தள்ளி பதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
-- சிவசண்முகம்
உதவி பொறியாளர்
மின்வாரியம் (நகர்)
----------------------------------
ஆய்வு செய்கிறோம்...
நான் பொறுப்பேற்று இரண்டு மாதமே ஆகிறது. ஒரு வாரம் முன் தான் டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்க வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளதை பற்றி தகவல் கிடைத்தது.மேலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை அளந்து தர தாலுகா அலுவலகத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஐ.,யிடம் டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைப்பதற்கான இடம் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தரணிதரன்
உதவி பொறியாளர்
நெடுஞ்சாலைத்துறை

