
திருப்பூர்:பி.என்., ரோடு, பூலுவபட்டி பிரிவில், ரிங் ரோடு பணி இடைப்பட்ட பகுதியில் முழுமை பெறாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
திருப்பூர், அவிநாசி ரோட்டில், திருமுருகன்பூண்டியில் துவங்கும் ரிங் ரோடு, பி.என். ரோட்டில் பூலுவபட்டி நால் ரோட்டைக் கடந்து, வாவிபாளையம், நெருப்பெரிச்சல் வழியாக ஊத்துக்குளி ரோட்டில் இணைகிறது.
இந்த ரோடு தற்போது அகலப்படுத்தி, தேவையான இடங்களில் மழை நீர் வடிகால் ஏற்படுத்தி புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 70 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன.
இருப்பினும், பூலுவபட்டி பிரிவிலிருந்து வாவிபாளையம் செல்லும் ரோட்டில் புதிய ரோடு போடு பணி முழுமை பெறாமல் உள்ளது. ஜல்லி பரப்பிய நிலையில் தார் ரோடு அமைக்காமல் உள்ளதால், வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது.
குறிப்பாக, டூவீலரில் செல்வோர் தடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்லும் போது ரோட்டில் புழுதி பறந்தும் சிரமம் நிலவுகிறது.
நெடுஞ்சலைத் துறையினர் கூறியதாவது:
பூலுவபட்டி பிரிவு பகுதியில், பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் மிகக் குறைந்த ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ளன. புதிய ரோடு அமைக்கும் போது இவை சேதமடையும் வாய்ப்பும், வாகனங்கள் செல்லும் போது அழுத்தம் காரணமாக உடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மாநகராட்சி நிர்வாகம், இந்த குழாய்களை மேலும் சற்று ஆழமாக மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது. அப்பணி முடிந்த உடன் ரோடு பணி முழுமையாக செய்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.