/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் போலி கிளினிக் நடத்திய பெண் கைது
/
திருப்பூரில் போலி கிளினிக் நடத்திய பெண் கைது
ADDED : மார் 29, 2025 07:22 AM

திருப்பூர்; திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் செயல்பட்டு வந்த போலி கிளினிக்குக்கு மருத்துவத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். கிளினிக் நடத்தி வந்த, பெண்ணை பெருமாநல்லுார் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி, தட்டாங்குட்டையில் எஸ்.எம்., கிளினிக் என்ற பெயரில், பொது நல மருந்தகம் செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு வந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனர் மீரா, மருத்துவ பணிகள் கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன், அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையில் மருத்துவக் குழுவினர், இந்த மருத்துவமனையில் நேற்று ஆய்வு நடத்தினர்.
இதில், நிம்மி, 45 என்ற பெண், தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு, எட்டு மாதங்களாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அப்பெண்ணிடம் மருத்துவக்குழுவினர், போலீசார் விசாரணை நடத்தினர்.
கிளினிக் நடத்த முறையான ஒப்புதல் பெறவில்லை. மருத்துவ படிப்புக்கான கல்விச்சான்றிதழ் எதுவும் அப்பெண்ணிடம் இல்லை. இதனால், பெருமாநல்லுார் போலீசார் நிம்மியை கைது செய்தனர். அதனை தொடர்ந்து, கிளினிக் மற்றும் மருந்தகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனர் மீரா கூறுகையில், ''தன்னை டாக்டர் என கூறிக்கொண்ட நிம்மி, மருந்தகத்தையும் நடத்தி வந்துள்ளார். இரு படுக்கை அமைத்து, நோயாளிகள் தங்கி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். போலி மருத்துவமனையில் இருந்து உபகரணம், ஊசி, மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.