/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரட்டிப்பு லாப ஆசை காட்டி பெண்ணிடம் மோசடி
/
இரட்டிப்பு லாப ஆசை காட்டி பெண்ணிடம் மோசடி
ADDED : ஆக 21, 2025 11:32 PM
திருப்பூர்; திருப்பூரை சேர்ந்த, 40 வயது பெண். இவரது மொபைல் போனுக்கு, சிறிய அளவில் முதலீடு செய்து, அன்றாடம் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம் என்று விளம்பரம் வந்தது. அப்பெண், போனுக்கு வந்த 'லிங்க்' வழியாக 'வாட்ஸ் ஆப்' குழுவில் இணைந்தார். முதல் கட்டமாக, சில விளம்பரங்களை பார்த்து, ரிவ்யூ கொடுத்ததால், சில ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அடுத்தடுத்து குழுவில் பேசிய நபர்கள், முதலீட்டு தொகை அதிகரிக்கும்; இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர். அந்த பெண் பல்வேறு தவணைகளாக, 2.45 லட்சம் ரூபாயை செலுத்தினார். அந்த பணத்தை திரும்ப பெற முயன்ற போது, மேலும் பணத்தை கட்டுமாறு கூறியுள்ளனர். பின், ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ரூ.14.41 லட்சம் கைவரிசை திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி வீதியை சேர்ந்தவர் சிங், 37. இவரது மொபைல் போன் 'வாட்ஸ் ஆப்'புக்கு ஆர்.டி.ஓ., சலான் என்ற ஒரு ஏ.பி.கே., பைல் வந்தது. வாகனத்துக்கு அபராதம் விதித்துள்ளார்களா என்று பார்க்க, அந்த பைலை திறந்து பார்த்து விட்டு மூடி விட்டார். பின், 18ம் தேதி வங்கி கணக்கில் இருந்து, 10 தவணைகளாக, 14.41 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.