UPDATED : அக் 20, 2026 05:28 PM
ADDED : அக் 20, 2026 05:24 PM

உடுமலை: பரவலாக பெய்த மழைக்குப்பிறகு, விளைநிலங்களில் காய்கறி சாகுபடிக்கு அடியுரம் இடுதல் உள்ளிட்ட பணிகளை, உடுமலை வட்டார விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு, கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வறட்சி நீங்கி சாகுபடி செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய மழை ஈரப்பதத்தை பயன்படுத்தி, காய்கறி சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். வரும் சீசனில், தக்காளி, கத்தரி, பச்சைமிளகாய், பீட்ரூட் உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக விளைநிலங்களில் அடியுரமாக தொழு உரம் மற்றும் இதர உரங்களை இட்டு, உழவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
மானாவாரி நிலங்களில் தீவன தேவைக்காக சோளம், மக்காச்சோளம் விதைப்பு செய்து வருகின்றனர். பி.ஏ.பி., மண்டல பாசன பகுதிகளிலும் நவ., மாத தண்ணீர் திறப்பை எதிர்பார்த்து விளைநிலங்களை தயார்படுத்தி, வரப்பு அமைத்து வருகின்றனர்.
வறட்சியால் பாதித்திருந்த சாகுபடி பணிகள், மழைக்குப்பிறகு அனைத்து பகுதிகளிலும் தீவிரமடைந்துள்ளது.
