/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகிழ்ச்சிப்பெருக்குடன் மஞ்சள் நீர் உற்சவம்
/
மகிழ்ச்சிப்பெருக்குடன் மஞ்சள் நீர் உற்சவம்
ADDED : ஜூன் 14, 2025 11:21 PM

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த் திருவிழா 12ம் நாளான நேற்று, மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.
யாகசாலையில், 24 காலபூஜை நடத்தி, வழிபடப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீரை கொண்டு, மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மஹா அபிேஷகம் நடந்தது.
முன்னதாக, சோமாஸ்கந்தர், விசாலாட்சியம்மன், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், மஞ்சள் நிற வஸ்திரங்களுடன் திருவீதியுலா சென்றனர்; பக்தர்களின் மஞ்சள் நீர் உபசாரத்தை ஏற்றனர். பக்தர்களும், பரஸ்பரம் மஞ்சள் நீர் தெளித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கோவம்ச சமூகநல அறக்கட்டளை சார்பில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, மாலையில் மலர் பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சோமாஸ்கந்தர், விநாயகர், சூலதேவர், விசாலாட்சியம்மன் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் உற்சவமூர்த்திகள், திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த, 12 நாட்களாக, 23 முறை, திருவீதியுலா சென்று அருள்பாலித்த உற்சவமூர்த்திகள், நேற்று கனகசபை மண்டபத்துக்கு திரும்பினர்.
திருவிழா நிறைவாக, காலபைரவருக்கு அபிேஷக, ஆராதனைகள் செய்து, நன்றி கூறும் நிகழ்ச்சியாக, விடையாற்றி உற்சவம் நடைபெறும்.
சிவாச்சார்யார்கள், பட்டாச்சாரியார்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், இரு கோவில்களிலும் விடையாற்றி உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
'ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் இன்று இரவு, 7:00 மணிக்கு, காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் வடைமாலை அலங்கார பூஜை நடக்கிறது' என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.