எரிசனம்பட்டி ஒன்றியம் உருவாக்குவதை மறந்துட்டாங்க!அரசு அறிவிப்பில் தொடர்ச்சியாக ஏமாற்றம்
எரிசனம்பட்டி ஒன்றியம் உருவாக்குவதை மறந்துட்டாங்க!அரசு அறிவிப்பில் தொடர்ச்சியாக ஏமாற்றம்
UPDATED : ஆக 03, 2026 04:02 PM
ADDED : ஆக 03, 2026 04:00 PM
உடுமலை: புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், நீண்ட காலமாக உடுமலை ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, எரிசனம்பட்டி ஒன்றியம் உருவாக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, அனைத்து தரப்பினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை ஊராட்சி ஒன்றியம், 1962ல் உருவாக்கப்பட்டது; 203 சதுர கி.மீ., பரப்பளவில், 38 ஊராட்சிகள் மற்றும் அதற்குட்பட்ட, 114 குக்கிராமங்கள் இந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளன.
பழங்குடியினர் உட்பட, 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அதிக ஊராட்சிகளையும், பரப்பளவையும் உள்ளடக்கிய ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.
எரிசனம்பட்டியை தலைமையிடமாகக்கொண்டு, புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இதையடுத்து கடந்த, 2014ல் ஒன்றியத்தை இரண்டாக பிரிப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
திருப்பூர் கலெக்டரால் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில், புதிய ஒன்றியம் உருவாக்க கருத்துரு தயாரிக்கப்பட்டது.
அதன்படி, உடுமலை ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, எரிசனம்பட்டியை தலைமையிடமாகக்கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கப்படும். உடுமலை ஒன்றியத்தில், 18; எரிசனம்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் இருக்கும் வகையில், திட்டமிடப்பட்டது.
ஒன்றிய குழு, ஊராட்சி, வார்டுகளும் பிரிக்கப்பட்டு, முழுமையான கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
அறிவிப்பு இல்லை சமீபத்தில், தமிழக அரசு நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களையும், 93 புதிய ஊராட்சிகளையும் உருவாக்கி உத்தரவிட்டுள்ளது. இதில், எரிசனம்பட்டி ஒன்றியம் உட்பட திருப்பூர் மாவட்டத்துக்கு எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால், இப்பகுதி மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'நிர்வாக காரணங்களுக்காக உடுமலை ஒன்றியத்தை இரண்டாக பிரித்தால் பயனுள்ளதாக இருக்கும். எரிசனம்பட்டி ஒன்றியம் உருவானால், பிற கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும். அனைத்து ஊராட்சிகளுக்கும் சீரான வளர்ச்சி கிடைக்கும்,' என்றனர்.
ஊராட்சியிலும் இல்லை உடுமலை ஒன்றியத்தில், ஆண்டியகவுண்டனுார் உட்பட ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களையும் பிரித்து, புதிய ஊராட்சிகள் உருவாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திலும் இத்தகைய கோரிக்கைகள் நீண்ட காலமாக உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையினர், நீண்ட கால கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
