/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுமையை புகுத்தும் இளம் தொழில்முனைவோர்
/
புதுமையை புகுத்தும் இளம் தொழில்முனைவோர்
ADDED : டிச 13, 2024 11:06 PM

திருப்பூர் 'இந்தியாவின் பலமே புதுமையைப் புகுத்தும் இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தி தான்' என்று கூறுகிறார் பிரதமர் மோடி. ''தமிழகத்தில் கடந்தமூன்று ஆண்டுகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில்முனைவோராக உருவாக்கப்பட் டுள்ளனர்'' என்கிறது தமிழக அரசு.
'வந்தாரை வாழ வைக்கும்' திருப்பூரில் இளைஞர்கள் ஒவ்வொரு தொழில்களிலும் கால்பதித்தால் மட்டுமே, வேகமான வளர்ச்சியை பெறலாம் என்பது அனுபவத் தொழில்முனைவோர் பலரது கருத்தாக உள்ளது. மாறுபட்ட தொழில்நுட்பத்தையும், மதிநுட்பத்தையும் கொண்டு திருப்பூர் இளைஞர்கள் பலர் சாதித்து வருகின்றனர்.
வலுவாக்கும் விளையாட்டு
திருப்பூரில் சாதித்து வரும் இளம் தொழில்முனைவோர் சிலரது கருத்துகள்:
விஷ்ணு, 'யாழி ஸ்போர்ட்ஸ்' விளையாட்டு பயிற்சி மையம்: விஜயாபுரம் அருகே, மூன்று ஏக்கர் பரப்பில், கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து பயிற்சி வளாகம் அமைத்துள்ளேன். 'சென்னை சூப்பர் கிங்ஸ்' உடன் இணைந்து, பயிற்சி அளித்து வருகிறேன். முன்னணி பள்ளிகளில் பயிற்சி மையம் அமைத்து பயிற்சி அளிக்கிறோம்.
திருப்பூரில் உள்ள, அனைத்து முக்கிய இடங்களிலும், பயிற்சி மையம் அமைப்பதே எனது இலக்கு. இன்றைய குழந்தைகள், 'டிஜிட்டல்' உலகில் இருக்கின்றனர்; படிப்பு துவங்கி அனைத்தும், ஆன்லைனில் நடக்கிறது. விளையாட்டு ஒன்று மட்டுமே, இளம் வயதினருக்கு பசுமையான நினைவுகளை உருவாக்கும். குழந்தைகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆற்றல் மிகுந்தவராக மாற விளையாட்டு மிக அவசியம்.
'ரிஸ்க்' இல்லாத வர்த்தகம்
மனோஜ், 'ஆன்லைன்' வர்த்தகர் மற்றும் 'டி-சர்ட்' உற்பத்தியாளர்: திருப்பூரில், 1999 முதல், 'டி-சர்ட்' உற்பத்தி செய்து வருகிறேன். கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக, 'ஆன்லைன்' வர்த்தகமும் செய்து வருகிறேன். 'ஜி பே', 'நெட் பேங்கிங்' போன்ற வசதிகள் வந்த பிறகு, ஆன்லைன் வர்த்தகம் எளிதாகிவிட்டது. எவ்வித 'ரிஸ்க்'கும் இல்லை; சிரமம் இல்லாமல் வர்த்தகம் செய்யலாம். நாடு முழுவதும் வர்த்தகம் செய்கிறேன்; சில நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வர்த்தகமும் ஆன்லைன் வாயிலாக செய்கிறேன்.
அனைத்து பரிவர்த்தனைக்கும், இன்சூரன்ஸ் இருப்பதால், எவ்வித அச்சமும் இல்லை. ஏதாவது பாதிப்பு என்றால், எளிதாக 'கிளெய்ம்' செய்ய முடிகிறது. நவீன கொரியர் வசதியும் வந்து விட்டது. 'ரிஸ்க்'கே இல்லாமல், 'ஆன்லைன்' வர்த்தகம் செய்தால், சிரமமின்றி சம்பாதிக்கலாம்.
வாடிக்கையாளர் விருப்பம்
ராஜேஷ் பாபு, பிரின்டிங் நிறுவன உரிமையாளர்: திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தில், 'பிரின்டிங்' தொழில்நுட்பம் அத்தியாவசிமானது. குறிப்பாக, 2014 முதல், 'டிஜிட்டல் பிரின்டிங்' திருப்பூரை வளர்த்துக்கொண்டிருக்கிறது. 'ஸ்கிரீன் பிரின்டிங்' செலவுடன் ஒப்பிடுகையில், டிஜிட்டல் பிரின்டிங் செய்ய செலவு குறைவு. சாம்பிள் ஆடை தயாரிக்க, டிஜிட்டல் பிரின்டிங் தான் சிறப்பானது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில்,ஒரு கலரில் இருந்து, 1000 கலர்களில் கூட பிரின்ட் செய்ய முடியும்.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'ஸ்கிரீன் பிரின்டிங்'கில் உள்ள முக்கிய அம்சங்களை இணைத்து, 'டிஜிட்டல் பிரின்டிங்' செய்வதில் வெற்றி அடைந்துள்ளோம். எந்த துறையாக இருந்தாலும், அதில் நாம் புதுமையை புகுத்தி வெற்றிகாண வேண்டும்.