ADDED : ஏப் 12, 2026 06:02 AM

பல்லடம்: 'உங்கள் அடையாளம்... உங்கள் கையில் தான் உள்ளது,' என, பல்லடத்தில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விசைத்தறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், சட்டசபை தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம், பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையம் கிராமத்தில் நடந்தது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். துணை தலைவர் சக்திவேல் அப்புகுட்டி, துணைச் செயலாளர். பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தொழில் மைய அலுவலர் ஸ்ரீசக்திவேல் பேசியதாவது:
திருப்பூர் என்றால் பனியன் தொழில்தான் பிரதானம். அதுபோல், பல்லடம் வட்டாரத்தில், விவசாயத்துக்கு அடுத்ததாக, கறிக்கோழி உற்பத்தி தொழில்தான் பெரும்பான்மையாக உள்ளது. அதற்கு அடுத்ததாக, விசைத்தறி நெசவுத்தொழில் உள்ளது. உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது.
நீங்கள் வழக்கமாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ, அதிலிருந்து மாறுபட்டு உங்களுக்கான பிரச்னைகளை களைய யோசியுங்கள்.
உங்களின் அடுத்த தலைமுறை வரும்போது அவர்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும். ஒருவர், ஒரு தொழிலை துவங்குவதும், நிலைத்து நிற்பதும் குறுகிய காலத்தில் நடப்பதல்ல. பல ஆண்டு காலம் தேவைப்படுகிறது.
அவ்வாறு, அந்த குறிப்பிட்ட தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதும், தொழிலில் நிலைத்து நிற்பதும் அவரவர் கையில்தான் உள்ளது.
எனவே, தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து, ஆட்சியில் அமரவைத்து உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.
