/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்ப பயன்பாடு: பசுமை சார் உற்பத்தி கருத்தரங்கில் பெருமிதம்
/
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்ப பயன்பாடு: பசுமை சார் உற்பத்தி கருத்தரங்கில் பெருமிதம்
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்ப பயன்பாடு: பசுமை சார் உற்பத்தி கருத்தரங்கில் பெருமிதம்
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்ப பயன்பாடு: பசுமை சார் உற்பத்தி கருத்தரங்கில் பெருமிதம்
ADDED : ஜூலை 24, 2025 12:19 AM

திருப்பூர்; 'ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம்' முதன்முதலாக திருப்பூரில் தான் துவங்கப்பட்டது; வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது,' என, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 'கிரீன் ஸ்டோரி' அமைப்பு சார்பில், நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது. கவுரவ தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். இணை செயலாளர் குமார் துரைசாமி வரவேற்றார்.
பொதுசெயலாளர் திருக்குமரன், 'பிராண்டிங்' துணை குழு தலைவர் ஆனந்த், துணை தலைவர் மேழிசெல்வன் முன்னிலை வகித்தனர்.
ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசுகையில், ''உலக நாடுகள் இன்று எதிர்பார்க்கும், நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை, திருப்பூர், 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே துவக்கி விட்டது. குறிப்பாக, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில், முதன்முதலாக திருப்பூரில் மட்டும் தான், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் துவங்கப்பட்டது; வெற்றிகரமாக இன்றும் செயல்படுத்தப்படுகிறது. வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை மேம்படுத்துவதன் வாயிலாக, எதிர்காலத்தில் வரலாறு காணாத வளர்ச்சியை திருப்பூர் அடையும்,'' என்றார்.
துணை தலைவர் இளங்கோவன் பேசுகையில், ''உலகம் முழுவதும் பரவியுள்ள சில்லரை விற்பனையாளர்கள், 'பிராண்ட்'கள், நிலைத்தன்மை கோட்பாட்டை எதிர்பார்க்கின்றன. ஏற்றுமதி வர்த்தகத்தில், ஒவ்வொரு நாடுகளை பொறுத்து, வரிவிதிப்பு முறைகள் மாறுபடுகின்றன; இதன்காரணமாக, அந்தந்த நாடுகளுக்கான ஏற்றுமதியும் பாதிக்கிறது.
இனிவரும் 2030ம் ஆண்டில், ஏற்றுமதியாளர்களின் நிலைத்தன்மையை அடிப்படையாக கொண்ட எதிர்பார்ப்புகள் மற்றும் தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்,'' என்றார்.
சர்வதேச அளவிலான, தரச்சான்று நிறுவனமான, 'கிரீன் ஸ்டோரி' நிறுவனத்தினர், வாழ்க்கை சுழற்சி மதிப்பீடு, 'டிஜிட்டல் புராடக்ட் பாஸ்போர்ட்' தரச்சான்றுகள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினர்.