/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அக்னி கலசத்தை மீண்டும் வைக்க திரண்ட பா.ம.க.,வினரால் பரபரப்பு
/
அக்னி கலசத்தை மீண்டும் வைக்க திரண்ட பா.ம.க.,வினரால் பரபரப்பு
அக்னி கலசத்தை மீண்டும் வைக்க திரண்ட பா.ம.க.,வினரால் பரபரப்பு
அக்னி கலசத்தை மீண்டும் வைக்க திரண்ட பா.ம.க.,வினரால் பரபரப்பு
ADDED : மார் 15, 2024 01:37 AM

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, வேலுார் நெடுஞ்சாலையில், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான, நாயுடுமங்கலம் கூட்ரோடு சாலையோரம், வன்னியர் சங்கம் சார்பில், அக்னி கலசம் கடந்த, 1989 டிச., 21ல் நிறுவப்பட்டது.
அதை, வன்னியர் சங்க நிறுவன தலைவர் ராமதாஸ் திறந்து வைத்தார். சாலை விரிவாக்கம் என்ற பெயரில், அக்னி கலசத்தை அகற்றி விட்டு, பணிகள் முடிந்த பிறகு, மீண்டும் அக்னி கலசம் வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியது.
இதன் பின்னணியில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு இருந்ததாகக் கூறப்படுகிறது.
பணிகள் முடிந்த பிறகு, அக்னி கலசத்தை, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் வைக்க முயன்றபோது, அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், அந்த இடத்தில் கடந்த, 10ல், திருவண்ணாமலை, பா.ம.க., தெற்கு மாவட்ட செயலர் பக்தவத்சலம் தலைமையில், அக்னி கலசம் வைக்கப்பட்ட போது, 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு' என, தமிழக அரசை எச்சரித்து அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையே, மீண்டும் அங்கு, அக்னி கலசம் நிறுவப்படும் என, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட போலீசார், திருவண்ணாமலை மற்றும் நாயுடுமங்கலம் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.
தெற்கு மாவட்ட செயலர் பக்தவத்சலம் மற்றும் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தலைமையில் நேற்று, 10,000க்கும் மேற்பட்டோர், 500க்கும் மேற்பட்ட வாகனங்களில், திருவண்ணாமலையிலிருந்து நாயுடுமங்கலம் வரை ஊர்வலமாகச் சென்று, அக்னி கலசத்தை மீண்டும் வைத்தனர்.
அப்போது அங்கிருந்த போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அனுமதித்தனர். இதனால், அப்பகுதியில் பதற்ற நிலை தணிந்தது.

