/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலை ரயில்வே ஸ்டேஷனை முனையமாக்க சோதனை ஓட்டம்
/
தி.மலை ரயில்வே ஸ்டேஷனை முனையமாக்க சோதனை ஓட்டம்
ADDED : ஜூலை 11, 2025 06:54 AM
திருவண்ணாமலை; திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷனை, முனையமாக மாற்ற சோதனை ஓட்டமாக, திருவண்ணாமலையிலிருந்து, ஆந்திர மாநிலம், நரசபூருக்கு, வாராந்திர ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.
ஆன்மிக நகரமாக விளங்கும் திருவண்ணாமலைக்கு, பல பகுதிகளிலிருந்து மாதத்திற்கு, 10 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதனால், திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷனை தரம் உயர்த்தி, ரயில்வே முனையமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், ரயில்வே பயணியருக்காக அமைக்கப்பட்ட ஏ.பி.ஜி.பி., என்ற அமைப்பின் சார்பில், ஜூன், 30ல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு, திருவண்ணாமலையிலிருந்து ரயில்கள் இயக்க மனு அளித்தனர்.
பொதுமக்கள் சார்பிலும் இங்கிருந்து சென்னை, மும்பை, டில்லி உட்பட, வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம், நரசபூருக்கு வாராந்திர ரயில் இயக்க திட்டமிட்டு, நேற்று காலை, 10:30 மணியளவில் சோதனை ஓட்டமாக, 2,500 பயணியருடன் ரயில் புறப்பட்டு சென்றது. இதற்கு ஏ.பி.ஜி.பி., அமைப்பின் திருவண்ணாமலை கிளை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில், ரயிலிற்கு மாலை அணிவித்து, பூஜை செய்து வழிபாடு நடத்தி, பயணியருக்கு இனிப்பு வழங்கி, ரயிலை வழியனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, மேலும் பல பகுதிகளுக்கு, ரயில்கள் இயக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.