/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
லாரியில் கஞ்சா கடத்திய இருவருக்கு தலா '11 ஆண்டு'
/
லாரியில் கஞ்சா கடத்திய இருவருக்கு தலா '11 ஆண்டு'
ADDED : ஜூலை 31, 2024 09:54 PM
திருச்சி:திருச்சி, சமயபுரம் பகுதியில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், கடந்த 2021ம் ஆண்டு செப்., 21ம் தேதி, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஈச்சர் லாரியை சோதனை செய்தபோது, ஆறு சாக்குப் பைகளில் 132 கிலோ கஞ்சா கடத்தப்பட்டதை கண்டு பிடித்தனர்.
கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தேனி மாவட்டம் காந்திகிராமத்தை சேர்ந்த மூவேந்திரன், 31, கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த பிரபு, 42, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, கஞ்சா சப்ளை செய்த மேலும் நான்கு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில், நடந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு பிரிவுகளில் மூவேந்திரன், பிரபுக்கு தலா 11 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
இதில், மூவேந்திரன் சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும், என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.