/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
வறட்சியால் கருகும் வாழைகள் நிவாரணம் வழங்க கோரிக்கை
/
வறட்சியால் கருகும் வாழைகள் நிவாரணம் வழங்க கோரிக்கை
வறட்சியால் கருகும் வாழைகள் நிவாரணம் வழங்க கோரிக்கை
வறட்சியால் கருகும் வாழைகள் நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : மே 09, 2024 02:36 AM

திருச்சி:திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை, வயலுார், கோப்பு, சிறுகமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 32,000 ஏக்கரில் நேந்திரம், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மொந்தன் என, பல்வேறு வாழை ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததாலும், வெயில் தாக்கம் அதிகம் இருப்பதாலும் வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீர் பாசனம் உள்ள நிலங்களில், 27 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வாழைகள் நன்றாக வளரும். இந்த ஆண்டு, திருச்சி மாவட்டத்தில், 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. தவிர, ஜூன் மாதத்தில், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர், அக்டோபர் மாத இறுதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, வாழை மரங்கள் காய்ந்து, பாதியில் முறிந்து விழுகின்றன. வாழைகள் தார் விட்ட நிலையில், காய்கள் திரட்சி இல்லாமல், மரங்களிலேயே வெம்பிக் கிடக்கின்றன. இதனால், வியாபாரிகள் வாழை தார்களை, விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய தயங்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட வாழைகளை கணக்கீடு செய்து, ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று, பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், திருச்சி கலெக்டர் பிரதீப்குமாரிடம் இதுகுறித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.