/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சந்தை வரியை கண்டித்து த.மா.கா., ஆர்ப்பாட்டம்
/
சந்தை வரியை கண்டித்து த.மா.கா., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 04, 2025 11:56 PM

திருச்சி; தமிழக அரசால், மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்ட 1 சதவீத செஸ் எனப்படும் சந்தை வரியை ரத்து செய்யக்கோரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில், திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அரசு, மக்காச்சோளத்துக்கு 1 சதவீதம் சந்தை வரி விதித்துள்ளது. மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாநில அரசின் வரி விதிப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சந்தை வரி விதிப்பை கண்டித்தும், அதை வாபஸ் பெறக்கோரியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில், காய்ந்த சோளக்கதிர்களுடன் விவசாயிகள் திரண்டு திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாய அணி நிர்வாகிகள் கூறியதாவது:
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காரணமாக, 90 சதவீதம் மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது. பூச்சிக்கொல்லி எதுவும் தயாரித்து வழங்கப்படவில்லை. மீன் உணவு, கோழித்தீவனம், செல்லுலோஸ் மற்றும் ஆல்கஹால் தயாரிப்பாளர்கள், மக்காச்சோளம் உற்பத்தியாளர்களை நம்பியே உள்ளனர்.
விவசாயிகளுக்கு அரசு தரப்பில் மூன்றாண்டுகளாக வழங்கிய உழவு மானியத்தையும், விவசாய உபகரணங்களுக்கு வழங்கிய மானியங்களையும் நிறுத்தி விட்டனர். இந்த ஆண்டு, அதிக மழைப்பொழிவு காரணமாக, மக்காச்சோளம் மகசூல் குறைந்து விட்டது.
ஆனால், மக்காச்சோளத்துக்கு 1 சதவீதம் சந்தை வரி விதித்துள்ளதால், வியாபாரிகள் மக்காச்சோளத்தை குறைந்த விலைக்கு கேட்கின்றனர். கால்நடை தீவனங்களின் விலையும் உயர்ந்து விட்டது. விவசாயிகளை, வேளாண் உற்பத்தியில் இருந்து அகற்றும் முயற்சியாக அரசின் நடவடிக்கை உள்ளது.
இதனால், விவசாயிகள் வேளாண்மையில் இருந்து முழுமையாக வெளியேறும் நிலை உள்ளது. மக்காச்சோள உற்பத்தியாளர்கள் விளிம்புநிலையில் இருப்பதால், 1 சதவீத சந்தை வரி விதிப்பை, மாநில அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.