/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மாற்று விமானத்தில் 110 பேர் திருச்சி டூ ஷார்ஜா பயணம்
/
மாற்று விமானத்தில் 110 பேர் திருச்சி டூ ஷார்ஜா பயணம்
மாற்று விமானத்தில் 110 பேர் திருச்சி டூ ஷார்ஜா பயணம்
மாற்று விமானத்தில் 110 பேர் திருச்சி டூ ஷார்ஜா பயணம்
ADDED : அக் 13, 2024 07:11 AM

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை, 5:40 மணிக்கு, 150 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவுக்கு புறப்பட்டது.
ரன்வேயில் இருந்து விமானம் மேல் எழும்பியதும், ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதன் சக்கரங்கள் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை.
உடனடியாக இதை கவனித்த விமானி, திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, விமானத்தின் எரிபொருளை குறைப்பதற்காக, வானிலேயே வட்டமடித்தார்.
இரண்டு மணி நேரத்துக்கு மேல், 26 முறை வானில் வட்டமடித்த விமானத்தை, இரவு, 8:15 மணிக்கு, திருச்சி விமான நிலையத்திலேயே, விமானி பத்திரமாக தரையிறக்கினார்.
திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:
விமானத்தில் ஏற்பட்டது தொழில்நுட்ப பிரச்னை. எரிபொருளை காலி செய்வதற்காக விமானம் வானில் வட்டமடித்தது. மாவட்ட நிர்வாகத்துக்கு, மாலை, 6:15 மணியளவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், நாங்கள் விமானியுடன் தொடர்பில் இருந்தோம். விமானத்தை தரையிறக்குவதில், 99.9 சதவீதம் எந்தவித பாதிப்பும் இருக்காது என, விமானி கூறியிருந்தார்.
இருப்பினும், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருந்தோம். தகவல் தெரிந்ததும் முதல்வர் ஸ்டாலின், என்னை தொடர்பு கொண்டு உத்தரவுகளை பிறப்பித்தார்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து, விமானிகள் பயணியருக்கு தெரிவிக்காததால், அவர்கள் பதற்றமடையாமல் இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
மாற்று விமானத்தில், அவர்கள் ஷார்ஜா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட விமானிக்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மாற்று விமானத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:59 மணிக்கு, 110 பேர் மீண்டும் ஷார்ஜா புறப்பட்டு சென்றனர்.
ஷார்ஜா செல்ல இருந்த பயணியரில், 34 பேர் பயணத்தை ஒத்தி வைத்துள்ளனர்.