/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
"கட்சியினர் யாரையும் கெடுக்க மாட்டேன்'
/
"கட்சியினர் யாரையும் கெடுக்க மாட்டேன்'
ADDED : ஜூலை 17, 2011 01:05 AM
திருச்சி: ''கட்சியினருக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். யாரையும் நான்
கெடுக்க மாட்டேன்,'' என்று திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரும்,
கால்நடைத்துறை அமைச்சருமான சிவபதி பேசினார்.திருச்சியில் அ.தி.மு.க.,
புறநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அவைத்தலைவர்
நெடுமாறன் தலைமை வகித்தார். கூட்டத்தில், புறநகர் மாவட்டச் செயலாளரும்,
கால்நடைத்துறை அமைச்சருமான சிவபதி பேசியதாவது:ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு
வென்று, ஜெயலலிதா தமிழக முதல்வரானது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. ஸ்ரீரங்கம்
தொகுதியில், தமிழக முதல்வர் இரண்டு கல்லூரிகளுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ்
மூலம் திங்கள் அன்று அடிக்கல் நாட்டுகிறார்.மாவட்டச் செயலாளராக
பொறுப்பேற்கும் முன், முதல்வர் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
கட்சிக்காரர்கள் அனைவருக்கும் உதவிச் செய்ய முதல்வர்
ஆணையிட்டுள்ளார்.உங்களுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். யாரையும் நான்
கெடுக்க மாட்டேன். கட்சியினர் உடனே வேண்டும் என்று கேட்கின்றனர்.
காலம்
அதிகமாக இருக்கிறது. பொறுமையாக இருங்கள். எல்லோருக்கும் கேட்பது
கிடைக்கும்.திருச்சி மாவட்டத்தில் ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள்
காலதாமதம் செய்வதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க
கலெக்டரிடம் கூறியுள்ளேன்.முதியோர் உதவித்தொகை, பென்ஷன் போன்ற வாஙக
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று சான்றிதழ் தேவை என்கின்றனர். அந்த
சான்றிதழ் தேவையில்லை என்று முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம்
பேசவிருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
மாநில இலக்கிய அணிச் செயலாளரும், திருச்சி மாவட்டப் பொறுப்பாளருமான
வைகைச்செல்வன் பேசியதாவது:ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதம் மட்டுமே
ஆகிறது. எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வருகிறது. உடனடியாக அனைத்து
காரியங்களையும் சாதிக்க முடியாது. காலம் நிறைய இருக்கிறது. பொறுமையாக
இருங்கள். அனைவருக்கும் நன்மை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரசு
அதிகாரிகளை வழிக்கு கொண்டு வர காலம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தவர்கள்,
வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். கிடைக்காதவர்கள்
கிடைத்தவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது.இவ்வாறு அவர்
பேசினார்.எம்.எல்.ஏ.,க்கள் பூனாட்சி, சந்திரசேகரன், இந்திராகாந்தி உட்பட
பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் பயன்பெறும்
வகையில் 190 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள், ஏழை, எளியவருக்கு 20 கிலோ இலவச
அரிசி, திருமண உதவியாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் நான்கு கிராம் தங்கம்
உட்பட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக வழங்கும் தமிழக முதல்வர்
ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.'முக்கனி' சாப்பாடு: பொதுவாக கட்சிகளின் செயல்வீரர்கள்
கூட்டத்தில் கறி பிரியாணியும், கோழி வறுவலும் வழங்கப்படும். அதற்குமாறாக,
நேற்று சனிக்கிழமை என்பதால், மா, பலா, வாழை என முக்கனிகளுடன் அறுசுவை சைவ
உணவு வழங்கப்பட்டது. செரிமானத்துக்கு ஐஸ்க்ரீமும் வழங்கப்பட்டது. சைவ
சாப்பாடு என்பதால் பெரும்பாலான பந்திகளில் கூட்டம் இல்லை. பிரியாணி ஆசையோடு
வந்தவர்கள், கூட்டத்தில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே, வேண்டா
வெறுப்பாக எழுந்து சாப்பிடச் சென்றனர்.