/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
இறந்த ஆசிரியர் உயிரோடு இருப்பதாக குடும்பத்தினர் ரூ.49.69 லட்சம் மோசடி
/
இறந்த ஆசிரியர் உயிரோடு இருப்பதாக குடும்பத்தினர் ரூ.49.69 லட்சம் மோசடி
இறந்த ஆசிரியர் உயிரோடு இருப்பதாக குடும்பத்தினர் ரூ.49.69 லட்சம் மோசடி
இறந்த ஆசிரியர் உயிரோடு இருப்பதாக குடும்பத்தினர் ரூ.49.69 லட்சம் மோசடி
ADDED : நவ 12, 2024 11:59 PM

திருச்சி; திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள மாராடியை சேர்ந்தவர் ஆசிரியர் ரெங்கராஜன். அரசு ஓய்வூதியம் பெற்று வந்த இவர், கடந்த, 2015ம் ஆண்டு இறந்து விட்டார். ஆனால், அவர் இறந்ததை, அவரது குடும்பத்தினர், பென்ஷன் வழங்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும், கருவூல துறைக்கும் தெரிவிக்கவில்லை.
அவர் உயிரோடு இருப்பது போல வங்கியிலும், கருவூல துறையிலும் காட்டி, முழு பென்ஷனை வாங்கி உள்ளனர்.
ரெங்கராஜன் மனைவி ஜெயக்கொடி, மகன் ஜெயதேவன் ஆகியோர் ரெங்கராஜனின் பென்ஷன் பணத்தை, வங்கியில் இருந்து, செக் மூலம் எடுத்து வந்துள்ளனர். இவ்வாறாக, 9 ஆண்டுகளாக முழு பென்ஷன் தொகையாக, 49.69 லட்சம் ரூபாயை, இருவரும் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் ரெங்கராஜன் மனைவி ஜெயக்கொடி இறந்து விட்டார். அப்போது, ரெங்கராஜன் உயிரோடு இருப்பதற்கான, ஆயுள் சான்று கேட்டு, கருவூலத்துறை அதிகாரிகள், ரெங்கராஜனின் இன்னொரு மகன் கிருஷ்ணதேவனை அணுகினர். தருவதாக கூறிய அவர் தரவில்லை.
இதையடுத்து, கருவூலத்துறை அதிகாரிகள் நேரடியாக அவர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது, ரெங்கராஜன், 2015ம் ஆண்டே இறந்ததும், அதை மறைத்து, அவரது குடும்பத்தினர் முழு பென்ஷன் வாங்கி, 49.69 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இந்த மோசடி குறித்து துறையூர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு மாராடி வி.ஏ.ஓ.,வாக இருந்த ஹேமலதா என்பவர், ஆசிரியர் ரெங்கராஜன் உயிரோடு இருப்பதாக சான்று வழங்கி உள்ளார்.
எனவே, 'இந்த மோசடியில் வி.ஏ.ஓ., மட்டுமின்றி, கருவூலத்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் என பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

