/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஜவுளிக்கடை ஊழியர் மீது தாக்குதல்
/
ஜவுளிக்கடை ஊழியர் மீது தாக்குதல்
ADDED : அக் 16, 2025 07:52 PM
திருச்சி: திருச்சியில் ஜவுளிக்கடை முன் சாலையோர கடை அமைத்த பெண்ணை தட்டிக்கேட்ட ஊழியரை, மக்கள் அதிகாரம் அமைப்பினர் தாக்கினர்.
திருச்சி, மலைக்கோட்டை என்.எஸ்.பி., சாலையில் உள்ள சாரதாஸ் ஜவுளிக்கடை எதிரே ராமஜெயம் என்ற பெயரில் ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடை முன் அங்கம்மாள் என்பவர் துணி வியாபாரம் செய்துள்ளார். இதை கண்ட ஜவுளிக்கடை ஊழியர், துவாக்குடியை சேர்ந்த சாரதி, 20, துணிகளை ஓரமாக வைத்து விற்க சொல்லி உள்ளார்.
இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த இந்திரா, லதா ஆகிய இருவரும், அந்த ஊழியரை கன்னத்தில் அறைந்து கைகளால் தாக்கினர்.
பெண்கள் அடித்ததால், என்ன செய்வது என தெரியாமல், அந்த ஊழியர் அடிகளை வாங்கி கொண்டு அப்படியே நின்றார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் காயமடைந்த ஊழியர் சாரதி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோட்டை போலீசில் புகாரும் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கோட்டை போலீசார் லதா உட்பட, நான்கு பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
இதில், லதா என்பவர், நாட்டுப்புற பாடகர் கோவனின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.