/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
முறைகேடு சார் - பதிவாளர் மீது வழக்கு
/
முறைகேடு சார் - பதிவாளர் மீது வழக்கு
ADDED : ஜன 18, 2025 12:15 AM
திருச்சி:திருச்சி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில், 2021 ஆக., 31 முதல், 2023 ஜூலை 5 வரை முரளி, 52, என்பவர் சார் - பதிவாளராக இருந்தார்.
அவரது பணிக்காலத்தில், பலரது சொத்துக்களில் நில வரன்முறை செய்து, வேறு நபர்களுக்கு மனைப்பிரிவு விற்பனை செய்ய, போலி ஆவணங்கள் தயார் செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.
திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சொத்துக்களுக்கு வரன்முறை கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணம் செலுத்தாமலேயே, கட்டணம் செலுத்தியதாக போலி ஆவணம் தயார் செய்து கொடுத்த ஆவண எழுத்தர்கள் கங்காதரன், பிரபு, சக்திவேல், சையது அமானுல்லா, முகமது உவைஸ், முகமது சலீம் ஆகியோருக்கு முரளி உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
முரளி உட்பட ஏழு பேரும் சேர்ந்து, சபீர் அகமது, பாலமுருகன் உட்பட பலரது சொத்துக்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து, வேறு நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்திருந்தனர்.
அதன் வாயிலாக, 12 லட்சத்து 13,405 ரூபாய், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதையும் கண்டுபிடித்தனர். சார் - பதிவாளர் முரளி உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.