/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
வசைபாடிய கவுன்சிலர்: 'பவர்' காட்டினார் மேயர்
/
வசைபாடிய கவுன்சிலர்: 'பவர்' காட்டினார் மேயர்
ADDED : ஆக 30, 2025 06:36 AM

திருச்சி; 'மேயர் பதவிக்கே நீங்கள் லாயக்கில்லை' என, தன்னை வசைபாடிய ஆளுங்கட்சி கவுன்சிலரை, கூட்டத்தில் இருந்து வெளியேற்றவும், இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டு, தன் பவரை காட்டினார் திருச்சி தி.மு.க., மேயர் அன்பழகன்.
திருச்சி மாநகராட்சி கூட்டம், தி.மு.க.வை சேர்ந்த மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், 57வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம், 'சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூ - வீலர் நிறுத்தம் ஏலம் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது. அதற்கு மறு ஏலம் விட வேண்டும்' என்றார்.
மேயர், 'முறைகேடு ஏதும் நடக்கவில்லை; 3 லட்சம் ரூபாய் கூடுதலாக ஏலம் விடப்பட்டுள்ளது' என பதில், கூறினார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர் முத்துச்செல்வம் தர்ணா செய்தார்.
அந்த கவுன்சிலருக்கு ஆதரவாக பேசிய, 55வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராமதாஸ், ''நீங்கள் மக்களுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுப்பதில்லை என்பதால், அவர்களே இணைப்பு கொடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது,'' என்றார்.
இதைக்கேட்ட மேயர், 'இதன் பின்னணில் நீங்கள் இருப்பதால் தான் போலீசில் புகார் கொடுக்கவில்லை. நீங்கள் இப்படி கூறுவதால், அந்த இணைப்பு கொடுத்தவர் மீது மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும்' என்றார்.
இதைக்கேட்டு கடுப்பான ராமதாஸ், ''நீங்கள் மேயர் பதவிக்கே லாயக்கில்லை,'' என, அவமரியாதையாக பேசினார்.
உடனே ஆத்திரமடைந்த மேயர், 'கவுன்சிலர் ராமதாசை, இரு மாதங்கள் கூட்டத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்கிறேன்' என, தன் பவரை காட்டினார். உடனே ராமதாசை கூட்டத்தில் இருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டார். ராமதாசும் வெளியேற்றப்பட்டார்.