/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி, தஞ்சையில் ஹவாலா ரூ.1.49 கோடி பறிமுதல்
/
திருச்சி, தஞ்சையில் ஹவாலா ரூ.1.49 கோடி பறிமுதல்
ADDED : ஜூலை 14, 2025 06:29 AM
திருச்சி: திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடந்த போலீசார் சோதனையில், மூன்று பேர் வைத்திருந்த 1.49 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் போலீஸ் ஸ்டேஷன் முன் உள்ள பஸ் நிறுத்தத்தில், நீண்ட நேரம் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்தவரை, தொட்டியம் போலீஸ் எஸ்.ஐ., வரதராஜபெருமாள் விசாரித்தார். ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பதும், அவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
பணத்துக்கான ஆவணங்களும், முகாந்திரமும் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த தொட்டியம் போலீசார், திருச்சி வருமான வரி துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற வருமான வரித்துறையினர் பணத்தை எண்ணி பார்த்த போது, 1 கோடியே 16 லட்சம் ரூபாய் இருந்தது. தொடர்ந்து, கோபிநாத்தை திருச்சியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதிக்கு, தனியார் ஆம்னி பஸ்சில் வந்த, சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சையத் அலாவுதீன், 46, பாரிஸ் பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி, 51, ஆகிய இருவரும், ஆவணங்கள் இன்றி 33.04 லட்சம் ரூபாய் வைத்திருந்ததை தஞ்சாவூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.