ADDED : ஜன 26, 2025 07:49 AM
திருச்சி : தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ரகுபதி, தமிழக சட்டத்துறை அமைச்சராக உள்ளார். நேற்று காலை, சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக, திருச்சி, கன்டோன்மென்ட் பகுதி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்தில் அடைப்பு இருப்பதாகக் கூறி, ஆஞ்சியோ சிகிச்சை அளித்தனர்.
தற்போது, உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.
ரகுபதி சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு சென்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, அமைச்சரின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.