/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஸ்ரீரங்கத்தில் ரவுடி கொலை கும்பல் வெறிச்செயல்
/
ஸ்ரீரங்கத்தில் ரவுடி கொலை கும்பல் வெறிச்செயல்
ADDED : ஜன 29, 2025 01:42 AM

திருச்சி:ஸ்ரீரங்கத்தில், 'ஜிம்' சென்று திரும்பிய ரவுடியை வழிமறித்து வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பு என்ற அன்பு அரசன், 38. இப்பகுதியில் ரவுடியான திலீப் என்பவரின் நெருங்கிய கூட்டாளி. அன்பு மீதும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர், நேற்று காலை ஜிம்முக்கு சென்று விட்டு, ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகில் உள்ள, 'டூ- - வீலர் பார்க்கிங்' பகுதியில், டூ - வீலரில் வந்தபோது, ஆறு பேர் கும்பல் வழிமறித்து, நடுரோட்டில், பலர் முன்னிலையில், இவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அண்மையில் நடந்த வைகுண்ட ஏகாதசி வேடுபறி நிகழ்ச்சியில், அன்பு அரசன், முறை வாங்குவது தொடர்பாக நடந்த பிரச்னை அல்லது சேவல் சண்டை தொடர்பான முன்விரோதத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என, போலீசார் கூறுகின்றனர்.
அவரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

