ADDED : டிச 24, 2024 11:34 PM

திருச்சி:இந்தியாவில், முதல் பயணியர் ரயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது.
டிச., 21-ம் தேதி டில்லியில் நடைபெற்ற நிகழ்வில், பொன்மலை ரயில்வே பணிமனைக்கு சிறந்த பணிமனைக்கான சுழற்கேடயத்தை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், பணிமனையின் தலைமை மேலாளர் சந்தோஷ்குமார் பெட்ரோ ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அந்த விழாவில், ரயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டும் வகையில் 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' என்ற விருது வழங்கப்பட்டது. தெற்கு ரயில்வேயில் இருந்து, எட்டு பணியாளர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருது வழங்கி கவுரவித்தார்.
உற்பத்தித் திறனை மேம்படுத்த பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகயும், செயல் திறனை மேம்படுத்தி செலவுகளை குறைத்ததற்காகவும், பொன்மலை ரயில்வே பணிமனையின் மூத்த பொறியாளர் கோபால கிருஷ்ணனுக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருது வழங்கினார்.
விருது பெற்று திரும்பிய கோபாலகிருஷ்ணனுக்கு, நேற்று முன்தினம், திருச்சி ரயில்வே நிலையத்தில், பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள், மக்கள் சக்தி இயக்கத்தினர் மற்றும் நண்பர்கள் வரவேற்று பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.