/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சேம நல நிதியில் ரூ.33 லட்சம் கையாடல்? அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலெக்டரிடம் "புகார்'
/
சேம நல நிதியில் ரூ.33 லட்சம் கையாடல்? அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலெக்டரிடம் "புகார்'
சேம நல நிதியில் ரூ.33 லட்சம் கையாடல்? அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலெக்டரிடம் "புகார்'
சேம நல நிதியில் ரூ.33 லட்சம் கையாடல்? அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலெக்டரிடம் "புகார்'
ADDED : ஆக 02, 2011 12:21 AM
திருச்சி: 'ஆசிரியர்களின் சேமநல நிதியிலிருந்து 33 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த கிளார்க், துணைபோன கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பாதிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் மனு அளித்தனர். திருச்சி கல்வி மாவட்டம் திருவெறும்பூர் இரண்டாவது வட்டத்துக்குட்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சேமநலநிதியிலிருந்து 33 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கையாடல் நடந்தது குறித்து கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரனிடம் நேற்று மனு அளித்தனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: திருவெறும்பூர் இரண்டாவது வட்டத்தில் அரசு உதவி பெறும் தனியார் துவக்கப்பள்ளியில் பணிபுரியம் 87 துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிபுரிகிறோம். கடந்த 1997ம் ஆண்டிலிருந்து திருவெறும்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சேம நல நிதி பணம் கட்டி வருகிறோம். சேம நல நிதியிலிருந்து 75 சதவீதம் வரை முன்பணம் (லோன்) அல்லது இறுதி முன்பணம் எடுக்கலாம். ஆசிரியர்கள் கேட்டத் தொகையை விட கூடுதலாக முன்பணம் கேட்டு கருவூலத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டு, 33 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஆசிரியர் 10 ஆயிரம் கடன் கேட்டால், 15 ஆயிரம் என கருவூலத்துக்கு வழங்கப்படும் படிவம் 70ல் பூர்த்தி செய்வர். இந்த படிவம் எங்களுக்கு தரப்படமாட்டாது. கருவூலத்துக்கும் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலக ஊழியருக்கும் இடையே தான் இது நடக்கும். கருவூலத்திலிருந்து வரும் தொகையை வங்கியில் செலுத்தி அதற்கான 'செக்'கை எங்களிடம் வழங்குவர். இல்லையெனில், பணமாக வழங்குவர். இதில், ஆசிரியர் வழங்கும் படிவத்தில் நாங்கள் குறிப்பிட்ட தொகையும், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து கருவூலத்துக்கு வழங்கும் படிவத்தில் கூடுதலாகவும் இருக்கும். இப்படி ஏழாண்டாக இந்த முறைகேடு நடந்துள்ளது. அவற்றை எங்களது கணக்கில் வைத்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 2006ம் ஆண்டு தணிக்கை செய்தபோது தான் இந்த கையாடல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சேம நல நிதி செலுத்தும் ஆசிரியர்களுக்கு எந்தவிதமான ரசீதும் வழங்கப்படுவதில்லை. இந்த விவகாரம் வெளியே வந்த பிறகு, அதன்பின், எந்த பிரச்னையும் நடப்பதில்லை. ஓய்வு பெற்ற கிளார்க் திருஞானம் என்பவர் தான் இந்த கையாடல்களை செய்துள்ளார். இதற்கு அந்தந்தக் காலத்தில் திருவெறும்பூர் இரண்டாவது வட்டத்தில் பணிபுரிந்த உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக அப்போதைய தலைமை செயலர் ஸ்ரீபதியிடம் முறையிட்டோம். அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலினை மூன்று முறை சந்தித்து மனு அளித்தோம். தொடக்கக்கல்வி இயக்குனர் தேவராஜை சந்தித்தபோது, ''2000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கின்றனர். 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், உங்களுக்கு பத்தாது,'' என்று எடுத்தெறிந்து பேசினார்.
இதுதொடர்பாக அப்போதைய கலெக்டர் சவுண்டையா, அமைச்சர் நேரு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என பலரிடமும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்ட நாங்கள் தான் திண்டாடி வருகிறோம். மோசடி நபர் நிம்மதியாக ஓய்வு காலத்தை கழித்து வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.