/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற தயங்கிய போலீஸார் மைக்கில் வெளுத்து வாங்கிய கோட்டை ஏ.சி.,
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற தயங்கிய போலீஸார் மைக்கில் வெளுத்து வாங்கிய கோட்டை ஏ.சி.,
ஆக்கிரமிப்புகளை அகற்ற தயங்கிய போலீஸார் மைக்கில் வெளுத்து வாங்கிய கோட்டை ஏ.சி.,
ஆக்கிரமிப்புகளை அகற்ற தயங்கிய போலீஸார் மைக்கில் வெளுத்து வாங்கிய கோட்டை ஏ.சி.,
ADDED : செப் 20, 2011 11:41 PM
திருச்சி: திருச்சி பெரிய கடைவீதியில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளை கண்டுகொள்ளாத காந்திமார்க்கெட் போலீஸாரை மைக்கில் கோட்டை ஏ.சி., வெளுத்து வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரில் மிகவும் நெரிசலான பகுதி என்றால் சின்னக்கடை வீதி மற்றும் பெரியகடை வீதிகள் தான். அங்கு தான் தமிழகத்தின் புகழ்பெற்ற ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும், பத்திரக்கடைகளும், புத்தகக்கடைகளும் உள்ளது. இந்த கடைகளுக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாது, வெளிமாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து செல்வதால், சின்னக்கடை வீதியும், பெரிய கடைவீதியும் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடனும், நெரிசல் மிகுந்ததாகவும் காணப்படும்.
இவைதவிர, மேற்கண்ட வீதிகளில் ரோட்டை ஆக்கிரமித்து தரைக்கடை வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் கடை விரித்துள்ளதால், அப்பகுதியில் மேலும் நெரிசலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. பெரிய கடைவீதியில் தள்ளுவண்டி கடைகளும், தரைக்கடைகளும் அதிகரித்து விட்டது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கோட்டை போலீஸ் ஏ.சி., ஸ்டாலின் பலமுறை காந்திமார்க்கெட் போலீஸாருக்கு உத்தரவிட்டும், அவர்கள் 'மாமூல்' காரணமாக அவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.
உத்தரவு பிறப்பித்தும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படாதது குறித்து கேள்விப்பட்ட கோட்டை ஏ.சி., ஸ்டாலின் நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் 'மைக்'கில் காந்திமார்க்கெட் போலீஸாரை தொடர்பு கொண்டார். அப்போது, 'பெரிய கடைவீதியில் போக்குவரத்து பாதிக்கும் வகையில் தரைக்கடைகளும், தள்ளுவண்டி கடைகளும் போட்டுள்ளதை அகற்ற பலமுறை உத்தரவிட்டுள்ளேன். ஆனால், அதை இதுவரை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சிறிதுநேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என்று காட்டமாக கூறினார்.
மைக்கில் செய்தியைக் கேட்ட ஏட்டு ஒருவர் எஸ்.ஐ.,யை அனுப்பி உடனடியாக அகற்றச் சொல்கிறேன் என்று கூறினார். இதனால் கோபமடைந்த ஏ.சி., 'ஒரு எஸ்.ஐ., எல்லாம் போதாது. பேட்ரோல் வண்டியோடு, இரு எஸ்.ஐ.,களை வைத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அகற்றிவிட்டு உடனடியாக எனக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்' என்று எச்சரித்து பேசினார். கோட்டை ஏ.சி., ஸ்டாலினின் எச்சரிக்கையை கேட்ட காந்திமார்க்கெட் போலீஸார் உடனடியாக பெரிய கடைவீதியில் தள்ளுவண்டி கடைகளையும், தரைக்கடைகளையும் அகற்றும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
கோட்டை போலீஸ் ஏ.சி., மைக்கில் காந்திமார்க்கெட் போலீஸாரிடம் கறாராக பேசி வேலைவாங்கியது போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.