/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ரூ.20,000 லஞ்சம் பெற்ற முன்னாள் கமிஷனருக்கு சிறை
/
ரூ.20,000 லஞ்சம் பெற்ற முன்னாள் கமிஷனருக்கு சிறை
ADDED : ஏப் 30, 2024 10:50 PM
வேலப்பாடி:வேலுார், வேலப்பாடியைச் சேர்ந்தவர் பாலாஜி, 50, ஒப்பந்ததாரர். இவர், வேலுார் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணிக்கான டெண்டரை, 2017ம் ஆண்டு எடுத்திருந்தார். இந்த பணிக்கான தொகை, 10.23 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அப்போது, மாநகராட்சி கமிஷனராக இருந்த குமார், 59, என்பவரிடம் கேட்டார். அவர், அதற்கு கமிஷனாக, 22,000 ரூபாய் தர கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி, வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 20,000 ரூபாயை, கமிஷனர் குமாரிடம் வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குமாரை கைது செய்தனர்.
வேலுார் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், வழக்கை விசாரித்து, முன்னாள் மாநகராட்சி கமிஷனருக்கு, மூன்றாண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று முன்தினம் மாலை உத்தரவிட்டார்.
தண்டனை பெற்ற முன்னாள் கமிஷனர் குமார், சில மாதங்களுக்கு முன், துாத்துக்குடி மாநகராட்சியில் துணை கமிஷனராக பணியாற்றி, ஓய்வுபெறும் நாளில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.