/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
விவசாயிகள் மறியல் வேலுாரில் பரபரப்பு
/
விவசாயிகள் மறியல் வேலுாரில் பரபரப்பு
ADDED : ஜூலை 26, 2024 01:04 AM
வேலுார்:வேலுார், அண்ணா சாலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், ஐந்து கிடங்குகளில், 20,000 நெல் மூட்டைகளை வைக்க முடியும். இங்கு விற்பனைக்கு நாள் ஒன்றுக்கு, 3,000 -- 4,000 மூட்டை நெல் விற்பனைக்கு வரும்.
அதை வியாபாரிகள் கொள்முதல் செய்யும் போது, முழு பணத்தையும் செலுத்தினால் மட்டுமே, நெல்லை அங்கிருந்து விடுவிக்க முடியும். வியாபாரிகள் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், அந்த நெல் மூட்டைகள் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்படும்.
இதனால், புதிதாக நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம், அவர்கள் மூட்டைகளை வைக்க இடமின்றி, திறந்தவெளி சாலையில் வைக்க, ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகின்றனர். அதனால், மழை மற்றும் வெயில் போன்றவற்றால் நெல்லின் தரம் பாதித்து, குறைவான விலைக்கு நெல் விற்பனையாகிறது.
நெல் தரம் பாதிக்காமல் இருக்க, மூட்டைகளை விற்பனைக்கு இறக்க அனுமதிக்க கோரி, நேற்று காலை, 10:00 மணியளவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலுார் டி.எஸ்.பி., திருநாவுக்கரசு, பாகாயம் போலீசார், விவசாயிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி, மறியலை கைவிட செய்தனர்.