/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கர்ப்பிணியுடன் 70 கி.மீ., சுற்றிய ஆம்புலன்ஸ் சகதியான மலைப்பாதை சாலையால் அவலம்
/
கர்ப்பிணியுடன் 70 கி.மீ., சுற்றிய ஆம்புலன்ஸ் சகதியான மலைப்பாதை சாலையால் அவலம்
கர்ப்பிணியுடன் 70 கி.மீ., சுற்றிய ஆம்புலன்ஸ் சகதியான மலைப்பாதை சாலையால் அவலம்
கர்ப்பிணியுடன் 70 கி.மீ., சுற்றிய ஆம்புலன்ஸ் சகதியான மலைப்பாதை சாலையால் அவலம்
ADDED : அக் 10, 2025 12:42 AM

அணைக்கட்டு:ஜமுனாமரத்துார் மலைப்பாதையில் கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாற்று பாதையில் சுற்றி சென்ற நிலையில், வழியிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது.
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பீஞ்சமந்தை ஊராட்சி குடிகம் மலை கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார், 34; கூலி தொழிலாளி. இவரது மனைவி ரோஜா, 30. தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
கர்ப்பமாக இருந்த ரோஜாவுக்கு, பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கட்டிப்பட்டு, பெரிய ஏரியூர் வழியாக ஒடுகத்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் மண் சாலை படுமோசமாக இருந்தது. தொடர்மழையால், சாலை முழுதும் சகதியாக இருந்தது.
ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது துாரத்தில் சேற்றில் சிக்கி நகர முடியாமல் திணறியது.
கொட்டும் மழையிலும் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியுடன் ஆம்புலன்சை மீட்கும் முயற்சி நடந்தது. பின், டிராக்டர் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் ஆம்புலன்ஸ் மீட்கப்பட்டது.
தொடர்ந்து, அந்த வழியாக செல்ல முடியாமல் 70 கி.மீ., துாரம் உள்ள குடிகம், ஜமுனாமரத்துார் வழியாக போளூர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஜமுனா மரத்துாரை கடந்து மலைப்பாதையில் சென்ற போது ரோஜாவுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து போளூர் அரசு மருத்துவமனையில் தாய், சேய்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
குழந்தைக்கு மருத்துவ கண்காணிப்பு தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வனப் பகுதி சாலை மோசமடைந்து இருந்ததால், பிரசவத்திற்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி 70 கி.மீ., துாரம் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலையை விரைந்து சீரமைக்க, மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.