திருமண மண்டபத்தில் சீர்வரிசை திருடிய சமையலர்கள் சிக்கினர்
திருமண மண்டபத்தில் சீர்வரிசை திருடிய சமையலர்கள் சிக்கினர்
ADDED : நவ 02, 2025 02:11 AM
வேலுார்: வேலுார் சலவன்பேட்டை திருமண மண்டபத்தில், சீர்வரிசை நகை, பணம் திருடிய சமையல் உதவியாளர்கள் இருவரை வேலுார் தெற்கு போலீசார் கைது செய்தனர்.
வே லுார் ஓல்டு டவுனைச் சேர்ந்தவர் தயாபரன்; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நந்தினி, 30. இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சி, வேலுார் சலவன்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அக்., 29ம் தேதி நடந்தது. நந்தினி தன் குடும்பத்தினருடன் அங்கு சென்றிருந்தார்.
அவரது பாட்டியை அழைத்து வருவதற்காக, தான் வைத்திருந்த 2 கிராம் சீர்வரிசை நகை மற்றும் 23,500 ரூபாய் மொய்ப்பணத்தை, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் வைத்துவிட்டு வெளியே சென்றார்.
இதற்கிடையே, அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் நாற்காலி அருகே அமர்ந்து பணம், நகையை திருடினர்.
தன் பாட்டியை மண்டபத்திற்கு அழைத்து வந்த நந்தினி, நாற்காலியில் வைத்திருந்த நகை, மொய்ப்பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வேலுார் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மண்டபத்தில் சமையல் செய்த உதவியாளர்கள் சலவன்பேட்டை சரவணன், 54, வசந்தபுரம் நாராயணன், 40, ஆகியோர் திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
