/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
இன்னும் எவ்வளவு இடம் எடுப்பீங்க? கலெக்டரிடம் கிராம மக்கள் கேள்வி
/
இன்னும் எவ்வளவு இடம் எடுப்பீங்க? கலெக்டரிடம் கிராம மக்கள் கேள்வி
இன்னும் எவ்வளவு இடம் எடுப்பீங்க? கலெக்டரிடம் கிராம மக்கள் கேள்வி
இன்னும் எவ்வளவு இடம் எடுப்பீங்க? கலெக்டரிடம் கிராம மக்கள் கேள்வி
ADDED : டிச 31, 2025 05:00 AM

வேலுார்: ''காட்பாடி தாலுகாவில் பவர் கிரீட், விரைவு சாலை, சிப்காட் என தொடர்ந்து விவசாய நிலங்களை அரசு பறித்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள, 2,000 குடும்பங்களை வெளியேற்றி விட்டு, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைப்பதால் யாருக்கு, என்ன பயன்,'' என கேட்டு, கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்த கூட்டத்தில் மகிமண்டலம், இளையநல்லுார், ஸ்ரீ பாதநல்லுார், மேல்பாடி, தேம்பள்ளி கிராமங்களின், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள், மகிமண்டலம் உள்ளிட்ட ஐந்து பஞ்.,களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த கிராம மக்கள் கூறியதாவது:
மகிமண்டலம் உள்ளிட்ட ஐந்து பஞ்சாயத்துகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, 2,500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த விளை நிலங்கள், வீடுகளை அளவீடு செய்யும் பணி நடக்கிறது.
ஏற்கனவே, இந்த ஊராட்சிகளில் பவர்கிரீட் மூலம் உயர் மின்கோபுரங்கள் அமைக்க, 1,700 ஏக்கர் நிலங்களும், சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்துக்கு 3,700 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு, பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன.
தற்போது சிப்காட் அமைக்க மேலும் நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம், 2,000 விவசாய குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே, காட்பாடி வட்டத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சிப்காட் அமைக்கும் திட்டத்தை அரசு முற்றிலும் கைவிட வேண்டும்.
அந்த பகுதியின், 2,000 குடும்பங்களை வெளியேற்றி, நிர்கதியாக்கி விட்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதால் யாருக்கு என்ன பயன்?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின், மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர், ''இக்கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும்,' ' என உறுதியளித்தார்.

