/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் தொடர்ந்து உயிரிழக்கும் யானைகள் சந்தேகம் அளிப்பதாக அதிகாரி 'பகீர்'
/
பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் தொடர்ந்து உயிரிழக்கும் யானைகள் சந்தேகம் அளிப்பதாக அதிகாரி 'பகீர்'
பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் தொடர்ந்து உயிரிழக்கும் யானைகள் சந்தேகம் அளிப்பதாக அதிகாரி 'பகீர்'
பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் தொடர்ந்து உயிரிழக்கும் யானைகள் சந்தேகம் அளிப்பதாக அதிகாரி 'பகீர்'
ADDED : டிச 06, 2025 02:04 AM
பேர்ணாம்பட்டு: ''பேர்ணாம்பட்டில், யானைகள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது,'' என, வன கால்நடை பராமரிப்பு அலுவலர் கலைவாணன் தெரிவித்தார்.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு வனச்சரகத்திற்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான சாத்கர் மலைப்பகுதியில் உள்ள ஏரியின் அருகே அழுகிய நிலையில், இரண்டு பெரிய யானை, ஒரு குட்டி யானை சடலங்கள் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டன.
தமிழக வனப்பகுதியில் இருந்து ஆந்திர எல்லைக்கு 5 கி.மீ., தொலைவில் வனப்பகுதி உள்ளதால், யானைகள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தமிழக, ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் வனக்கோட்ட வன பாதுகாவலர் பெரியசாமி, முதன்மை தலைமை வன பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து மற்றும் மதுரை வன கால்நடை பராமரிப்பு அலுவலர் கலைவாணன் ஆகியோர் தலைமையில் ஏழு பேர் கொண்ட மருத்துவ குழுவினர், யானைகளை நேற்று உடற்கூறு ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் வனக்கோட்ட வன பாதுகாவலர் பெரியசாமி கூறுகையில், ''உயிரிழந்த யானைகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சில தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று யானைகளும் உயிரிழந்ததாக தெரிகிறது. 10 முதல் 15 நாட்கள் இடைவெளிக்குள் மூன்று யானைகளும் உயிரிழந்துள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், யானைகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும்,'' என்றார்.
மதுரை மாவட்ட வன கால்நடை பராமரிப்பு அலுவலர் கலைவாணன் கூறுகையில், ''பேர்ணாம்பட்டு மலைப்பகுதிகளில் யானைகள் தொடர்ந்து உயிரிழப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா, மின்னல் தாக்கி உயிரிழந்ததா, நோய் தாக்கம் ஏற்பட்டிருக்குமா என, பல சந்தேகங்கள் உள்ளது.
''இப்பகுதியில் ஒரு யானை நடமாட்டம் உள்ளது. அதனால் தண்ணீரில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. வேட்டையாடப்பட்டதற்கான அறிகுறியும் இல்லை. விலங்குகளுக்கு ஏற்படும் வைரஸ் காய்ச்சலால் கூட யானைகள் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்,'' என்றார்.

