/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'பாலாறு, தென்பெண்ணை ஆறுகளை இணைக்க திட்டம்'
/
'பாலாறு, தென்பெண்ணை ஆறுகளை இணைக்க திட்டம்'
ADDED : டிச 05, 2024 11:38 PM

வேலுார் : ''கிருஷ்ணகிரி அணையிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேறும் காலங்களில், பாலாற்றில் கலக்கும் வகையில், தென்பெண்ணை - பாலாறு இணைப்பு குறித்த திட்டம், ஆய்வு செய்யப்படுகிறது,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்டம், தாழையாத்தம் - குடியாத்தம் நகரை இணைக்கும் வகையில் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே, 8.41 கோடி ரூபாய் மதிப்பில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி குடியாத்தத்தில் கவுண்டன்ய மகா நதிக்கரையிலிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. அதற்காக அந்த மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மக்களுக்காக தான் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
சாத்தனுார் அணையில் அதிகளவு நீர் நிரம்பி பிரச்னையாக மாறியுள்ளது. காரணம், கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் நேராக சாத்தனுார் அணைக்கு செல்கிறது. அங்கிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு கடலில் கலக்கிறது.
கிருஷ்ணகிரி அணையில் அதிகளவு உபரி நீர் வரும் காலங்களில், திருப்பத்துார் மாவட்டம், காக்கங்கரை ஏரி வழியாக பாலாற்றில் இணைக்க, தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் குறித்து, தமிழக அரசு ஆய்வு செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.