ADDED : ஏப் 24, 2026 03:57 AM

குடியாத்தம்: வேலுார் மாவட்டத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரோபோக்கள் வாயிலாக வரவேற்பு வழங்கப்பட்டது.
வேலுார் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் நேற்று காலை ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு, ரோபோ வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கிருந்த ரோபோ ஓட்டுச் சாவடிக்கு வந்த பொதுமக்கள், சிறுவர்களை கை கொடுத்து வரவேற்றது.
அதேபோல, வேலுார் மாவட்டம், குடியாத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, குடியாத்தம் நகராட்சி பள்ளியில் பெண்களுக்கான சிறப்பு 'பிங்க்' ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதில், வாக்காளர்களை கவரும் விதமாக பாரம்பரிய உடை அணிந்த ரோஜா என்ற பெண் ரோபோ ஓட்டளிக்க வரும் வாக்காளர்களுக்கு ரோஜா பூ கொடுத்து, தமிழில் பேசி அவர்களுக்கான அறிவுரை வழங்கி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது. 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ரோபோ வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
