அறிவியல் தொழில்நுட்பம் வளரும் நாடுகளுக்கு அவசியம் வி.ஐ.டி., வேந்தர் பேச்சு
அறிவியல் தொழில்நுட்பம் வளரும் நாடுகளுக்கு அவசியம் வி.ஐ.டி., வேந்தர் பேச்சு
ADDED : செப் 20, 2026 11:42 PM

காட்பாடி: ''வளரும் நாடுகளுக்கு அறிவி யல் தொழில்நுட்பம் மிகவும் அவசியம்,'' என, வி.ஐ.டி., வேந்தர் கோ.விசுவநாதன் பேசினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடியில் உள்ள வி.ஐ.டி., பல்கலையில், மூன்று நாள் 'கிராவிடாஸ் தொழில்நுட்ப அறிவுசார் விழா'வின் நிறைவு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, வி.ஐ.டி., வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது:
கிராவிடாஸ் நிகழ்வில், பதிவு செய்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, 39 ஆயிரத்து 49. மொத்தம், 227 நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 100 பேர் பங்கேற்றனர்.
கிராவிடாஸ் நிகழ்வு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டது. எந்தவொரு வளர்ந்து வரும் நாட்டிற்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு அவசியமானது. இந்தியாவில், 18 - 23 வயதுக்குட்பட்ட, 15 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். இதில், 30 சதவீதத்தினருக்கு மட்டுமே உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கிறது.
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமெனில், அனைத்து குழந்தைகளுக்கும் உயர் கல்வி வழங்க வேண்டும். உயர் கல்வி வழங்க காரணமாக இருக்கும் பெற்றோருக்கு நன்றி. பெற்றோர் கல்வி கட்டணம் செலுத்த மறுத்தால், யாருமே படிக்க முடியாது.
மாறாக, 3 - 4 சதவீதம் பேர் மட்டுமே அரசின் உதவித்தொகையை பெற்று படிக்க முடியும்; இது போதாது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் உயர் கல்வி வழங்க வேண்டும்.
அரசு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங் களும், தொழில் துறையினரும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியா இப்போது வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட வேண்டிய தருணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, கிராவிடாஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், வி.ஐ.டி., பல்கலையின் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்டா ரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளர் ஜெயபாரதி.
கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளர் சுதாகர், வி.ஐ.டி., முன்னாள் மாணவரும், டி.ஜி., நிறுவனத்தின் நிறுவனருமான ஹேமந்த் சஹால், 'காக்னிசன்ட்' நிறுவனத்தின் சர்வதேச திறமையாளர் தேர்வு பிரிவு முதுநிலை துணைத் தலைவர் அதுல் சஹால், 'போட்' நிறுவனத்தின் இணை நிறுவனர் அமன் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
