/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுாரை வெள்ளக்காடாக்க மாநகராட்சி முயற்சி பிரதான கால்வாயில் குப்பை கொட்டி அட்டூழியம் படகில் சென்று அகற்றும் உள்ளூர் இளைஞர்கள்
/
வேலுாரை வெள்ளக்காடாக்க மாநகராட்சி முயற்சி பிரதான கால்வாயில் குப்பை கொட்டி அட்டூழியம் படகில் சென்று அகற்றும் உள்ளூர் இளைஞர்கள்
வேலுாரை வெள்ளக்காடாக்க மாநகராட்சி முயற்சி பிரதான கால்வாயில் குப்பை கொட்டி அட்டூழியம் படகில் சென்று அகற்றும் உள்ளூர் இளைஞர்கள்
வேலுாரை வெள்ளக்காடாக்க மாநகராட்சி முயற்சி பிரதான கால்வாயில் குப்பை கொட்டி அட்டூழியம் படகில் சென்று அகற்றும் உள்ளூர் இளைஞர்கள்
ADDED : அக் 25, 2025 01:59 AM

வேலுார்: வேலுார் மாநகராட்சியில் மழைநீர் வடிய வேண்டிய பிரதான கால்வாயில், மாநகராட்சியே குப்பை கொட்டி பாழாக்குவதால், மக்கள் அதிருப்தியடைந்து, தாங்களே கால்வாயில் இறங்கி குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
வேலுார் மாவட்டத்தில், வேலுார், சத்துவாச்சாரி, காட்பாடி, திருவலம், அணைக்கட்டு, குடியாத்தம், ஒடுகத்துார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதற்கிடையே, வேலுார் முள்ளிபாளையம், சேண்பாக்கம், தொரப்பாடி, அரியூர், காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை, கன்சால்பேட்டை ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
காட்பாடி கிளித்தான் பட்டறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட தேங்காய் நார் கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அவர்கள் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அவர்கள் வீட்டில் உள்ள பொருட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
வேலுார் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் நிக்கல்சன் கால்வாய் தான். இந்த கால்வாயில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து, தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது.
வேலுார் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாயில், வேலுார் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி வண்டியில் குப்பையை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
ஏற்கெனவே கால்வாயில் தேங்கிய குப்பையால் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து வரும் நிலையில், மாநகராட்சி கால்வாயில் குப்பை கொட்டி மேலும், தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்படுத்துவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்காமல், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, அப்பகுதி இளைஞர்கள் நேற்று ரப்பர் டியூப் மூலம் கால்வாயில் இறங்கி, குப்பையை அகற்றினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
நிக்கல்சன் கால்வாயில் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பை கொட்டப்படுவதால் அங்கிருந்து நீர் வெளியேற முடி யாமல், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் ஏற்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகமே குப்பை யை கிடங்கில் கொட்டாமல், நிக்கல்சன் கால்வாயில் கொட்டுவது, வேலுாரை வெள்ளக்காடாக்கும் முயற்சியாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை விரைந்து துார்வார வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாயில் குப்பை கொட்டிய துாய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாயை சீர்படுத்தி, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்தப்படும்' என்றனர்.
இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் மழைநீர் தே ங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அரக்கோணம், ஜோதி நகர் அரசு பள்ளியில் மழைநீர் தேங்கியதால் நேற்று இந்த பள்ளிக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியிலும் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

