/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுாரில் 1806ல் நிகழ்ந்தது சிப்பாய் புரட்சி தமிழக கவர்னர் ரவி பெருமிதம்
/
வேலுாரில் 1806ல் நிகழ்ந்தது சிப்பாய் புரட்சி தமிழக கவர்னர் ரவி பெருமிதம்
வேலுாரில் 1806ல் நிகழ்ந்தது சிப்பாய் புரட்சி தமிழக கவர்னர் ரவி பெருமிதம்
வேலுாரில் 1806ல் நிகழ்ந்தது சிப்பாய் புரட்சி தமிழக கவர்னர் ரவி பெருமிதம்
ADDED : டிச 22, 2024 12:43 AM
வேலுார், டிச. 22-
''வேலுாரில், 1806ம் ஆண்டு ஏற்பட்டது சிப்பாய் கலகம் அல்ல; சிப்பாய் புரட்சி,'' என, கவர்னர் ரவி பேசினார்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவது, குடும்பத்தினருக்கு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை தீர்க்கும் வகையில் சிறப்பு முகாம் நேற்று, வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் நடந்தது. மத்திய அரசின் பாதுகாப்பு கணக்குகள் துறை கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
தமிழக கவர்னர் ரவி, நிகழ்ச்சியை துவக்கி வைத்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதிய பலன்களை முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கி பேசியதாவது:
வேலுார் ஒரு புண்ணிய பூமி; வீர பூமி. வேலுார் மாவட்டத்தில், ராணுவபேட்டை என்று அழைக்கப்படும் கம்மவான்பேட்டையில், 4,000 க்கும் மேற்பட்டோர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
வேலுாரில், 1806ம் ஆண்டு ஏற்பட்டது சிப்பாய் கலகம் அல்ல; சிப்பாய் புரட்சி. இதில் இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்டதில், நுாற்றுக்கணக்கானோர் பலியாகினர். இந்த சிப்பாய் புரட்சி பற்றிய வரலாற்றை, நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த புரட்சி, தென்னிந்தியா முழுவதும் பரவி சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டது.
நாம் நிம்மதியாக உறங்க காரணம் ராணுவ வீரர்கள். நாட்டையும், காப்பாற்றி நம்மையும் காப்பாற்றுகிறார்கள்.
பிரதமர் மோடி, ராணுவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்தியா, 2047ல், வல்லரசு நாடாக மாற, 5 கோட்பாடுகளை வகுத்து பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். ராணுவ சேவை என்பது ஒரு அரசு வேலை அல்ல; ஒரு மகத்தான பணி.
முன்னாள் ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். நம் நாட்டை காப்பாற்ற போராடியவர்கள். அவர்கள் ஓய்வுபெற்ற பின், பலன்கள் பெறுவதில் சிரமப்பட்டனர். இப்போது அது எளிமை படுத்தப்பட்டு விட்டது.
முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு, மருத்துவ செலவு வழங்குவதில் இருந்த இடையூறு களையப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளனர். அவர்களை பார்த்து இந்த தேசம் பெருமை கொள்கிறது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை காப்பது அரசின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் கடமை. அவர்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.